50 தலைகள் வேண்டும்.... ராணுவ வீரரின் மகள் 'ஆவேச' கதறல்!

ஏப்ரல் 28-ஆம் தேதியே விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால்.....

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டினை தாண்டி வந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழு (BAT) நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு இந்திய வீரர்களின் தலையை பாகிஸ்தான் துண்டித்துள்ளது.

அந்த இரு வீரர்களில் ஒருவர், பஞ்சாபை சேர்ந்த நைப் சுபேந்தர் பரம்ஜித் சிங் என்றும் மற்றொருவர், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிஎஸ்எஃப் 300-வது பட்டாலியன் தலைமைக் காவலர் பிரேம் சாகர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தலைமைக் காவலர் பிரேம் சாகரின் மகள் சரோஜ், ஏஎன்ஐ-க்கு கண்ணீர் மல்க அளித்த பேட்டியில், தனது தந்தையின் தியாகத்திற்கு பரிசாக 50 தலைகள் வேண்டுமென கூறியள்ளார். ஐம்பது வயதான பிரேம் சாகர், 1994-ல் பிஎஸ்எஃப்-ல் பணியில் சேர்ந்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஜம்முவிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தான் குடும்பத்தாரை சந்தித்துச் சென்றிருக்கிறார். இதனால், அவருடைய வீட்டில் சொல்ல முடியா வண்ணம் சோகம் நிறைந்துள்ளது.

இதே நிலைமை தான் பஞ்சாபின் டர்ன் டரன் மாவட்டத்தில் வசிக்கும் பரம்ஜித் சிங் வீட்டிலும் நிலவுகிறது. அவரது மகள் ஏஎன்ஐவிற்கு அளித்த பேட்டியில், “என் தந்தை நாட்டுக்காக தியாகியாகிவிட்டார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்றார். மேலும், பரம்ஜித் சிங் சகோதரர் கூறுகையில், “பரம்ஜித் சமீபத்தில் தான் புது வீடு ஒன்றை கட்டி முடித்தார். விரைவில் அங்கு குடிபெயர திட்டமிட்டிருந்தோம்.

அவர் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதியே விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால், அவரது நண்பர்களில் ஒருவருக்கு திடீரென விடுமுறை தேவைப்பட்டதால், தன்னுடைய விடுமுறையை இவர் ரத்து செய்துவிட்டார். இதையடுத்து, மே மாதம் 8-ஆம் தேதி வீட்டிற்கு வருவதாக குடும்பத்தாரிடம் தெரிவித்திருந்தார்” என்றார்.

கடைசியாக ஐந்து மாதங்களுக்கு முன்னர் தன் வீட்டிற்கு அவர் வந்திருந்தார் என கூறிய மற்றொரு உறவினர் ஒருவர், “இந்த சம்பவத்திற்கு அரசு உரிய பதிலடி தர வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

×Close
×Close