பிரதமர் நரேந்திர மோடியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி, ராஜஸ்தானை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா. இவர், பிரதமர் நரேந்திரமோடியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி, கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில், மோடி புகைப்படத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து அப்பெண் தெரிவித்ததாவது, “எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். அதுபோல, மோடியும் தனிமையில் இருக்கிறார். அதனால், நான் அவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.”, என தெரிவித்தார்.
மேலும், “பெரியவர்களை மதிக்க வேண்டும் என சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுத்திருக்கின்றனர். நான் மோடியை மதிக்கிறேன். என்னை மனநோயாளி என நினைத்து மற்றவர்கள் என்னை பார்த்து சிரிக்கின்றனர். ஆனால், என் மனநிலை நன்றாக உள்ளது. பணத்துக்காக நான் அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. என்னிடமே நிலம், சொத்துகள் ஆகியவை நிறைய உள்ளன. அதை விற்றுகூட மோடியை காப்பாற்றுவேன்”, என கூறினார்.
“அவரை பார்ப்பதற்கு யாரும் என்னை அனுமதிக்கவில்லை. அதனால் தான் இங்கு போராட்டம் நடத்திவருகிறேன். மோடி என்னை வந்து சந்திக்கும் வரை நான் போராட்டத்தை தொடருவேன்”, என அப்பெண் கூறினார்.
ஓம். சாந்தி சர்மாவுக்கு ஏற்கனவே 20 வயதில் மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.