பெங்களூருவில், தண்ணீரில் மூழ்கும் தனது நண்பனை கவனிக்காமல், நண்பர்கள் குழு செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்ததால், 17 வயது மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த ராஜூ. இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது 17 வயது மகன் விஷ்வாஸ், பசவனகுடி நேஷனல் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி தேசிய மாணவர் படையில் உள்ள விஷ்வாஸ் உள்ளிட்ட 25 பேர் ராமநகர் மாவட்டத்திலுள்ள முகாமிற்கு சென்றிருந்தனர். அவர்களை கிரீஷ் மற்றும் சுந்தர் ஆகிய இரு பேராசிரியர்கள் அழைத்து சென்றிருந்தனர்.
அப்போது, ரவகோண்ட்லு பெட்டா என்ற மலைப்பகுதியில் என்.சி.சி. பயிற்சிக்காக முகாமிட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரியில் விஷ்வாஸ் மற்றும் அவரது நண்பர்கள் குளிக்க சென்றனர்.
இந்நிலையில், மாணவர் ஒருவர் தன் செல்ஃபோனில் அனைவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, செல்ஃபி எடுக்கும் நண்பர்களுக்கு பின்னால் குளித்துக் கொண்டிருந்த விஷ்வாஸ் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தால், விஷ்வாஸ் நீரில் மூழ்குவது மற்றவர்களுக்கு தெரியவில்லை.
இதையடுத்து, சிறிது நேரம் கழித்து விஷ்வாஸை காணாததால் நண்பர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது, குளித்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்தபோது, தங்களுக்கு பின்னால் விஷ்வாஸ் மூழ்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ககலிபுரா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பின், அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விஷ்வாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, விஷ்வாஸின் உடலை அவரது உறவினர்கள் கல்லூரிக்குள் எடுத்து சென்றனர். ஆனால், அவரது உடலை கல்லூரிக்குள் கொண்டு வர நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மாணவரின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என உறவினர்களிடம் போலீசார் கூறினர்.
இதன்பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து, விஷ்வாஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், இறந்த மானவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியும் கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேராசிரியர் கிரீஷ் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான கிரீஷை தேடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.