இந்தியாவிலேயே முதன்முறையாக பெங்களூரு நகரத்தில் ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை துவங்கப்பட உள்ளது. இத்தகவலை மத்திய விமானத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
இதுதொடர்பாக, வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த் சின்ஹா, “தும்பி ஏவியேஷன் எனும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவை துவங்கப்பட உள்ளது. இன்னும், 3 மாதத்தில் இந்த சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இந்த சேவை துவங்கப்பட உள்ளது. பெங்களூரின் மின்னணு நகரம் என அழைக்கப்படும் ஆனைக்கல் வரை இந்த சேவை வழங்கப்பட உள்ளது. அங்கு ஹெலிபோர்ட் எனப்படும் ஹெலிகாப்டரை நிறுத்தி வைக்கும் இடம் அமைக்கப்பட உள்ளது. சில மணிநேரங்கள் பயண நேரமாகும் இடத்திற்கு இதன் மூலம் 15 நிமிடங்களுக்குள் சென்றுவிடலாம்.”, என கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது, “பெங்களூரில் இந்த சேவை துவங்கப்படுவதன் மூலம் மற்ற நகரங்களுக்கும் இந்த சேவை விரிவாக்கம் செய்ய வழிவகுக்கும் என நம்புகிறோம். பிரேசிலின் சா பவுலோ நகரம் கிட்டத்தட்ட பெங்களூரை போன்று பரந்து விரிந்த நகரமாகும். கிட்டத்தட்ட 300 ஹெலிகாப்டர்கள் இந்த டாக்ஸி சேவையை வழங்குகிறது. இந்த சேவையின் மூலம் போக்குவரத்து நெரிசலால் பாதிக்காமல் இருக்க முடியும்.”, என தெரிவித்தார்.
தும்பி ஏவியேஷன் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் கே.என்.ஜி.நாயர் கூறியதாவது, ”ஆரம்பத்தில் 407 சாப்பர் ஹெலிகாப்டர் மூலம் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதில், 6 பயணிகள் அமர முடியும்.”, என கூறினார்.
கட்டணம்இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பொதுமக்களின் ஆதரவிற்குப் பின் கட்டணம் இறுதி செய்யப்படும் என தெரிகிறது. இருப்பினும், தற்போதைக்கு, கேம்பகௌடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, விமான நகரம் வரை 50 கிலோமீட்டர் பயணத்திற்கு ரூ.1,500-ரூ.2,500 வரை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கு சாலை வழியாக பயணித்தால், போக்குவரத்து நெரிசலுடன் கணக்கிட்டால், ஒன்றரை மணிநேரம் முதல் மூன்று மணிநேரம் செலவாகும். ஆனால், இந்த சேவையின் மூலம் 15 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநில தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே கூறியதாவது, “ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையானது அவசர உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பெங்களூர் நகரத்தில் 90 ஹெலிபேட்கள் பல அடுக்கு கட்டடங்களில் உள்ளன. அவை அனைத்தும் இத்திட்டத்திற்காக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். விரைவில் இந்த வேலைகள் செய்து முடிக்கப்படும்”, என கூறினார்.