/indian-express-tamil/media/media_files/2025/10/18/maithili-thakur-bhojpuri-folk-singer-2025-10-18-13-08-41.jpg)
Bihar Assembly Election 2025| BJP Candidate Maithili Thakur |Bhojpuri Folk Singer |Alinagar
சுவன்ஷு குரானா
பீகார் அரசியல் களம் எப்போதுமே திரைப்பட மற்றும் போஜ்பூரி இசைக் கலைஞர்கள் அரசியல்வாதிகளாக மாறியவர்களால் நிரம்பி வழியும். ஆனால், 25 வயதான மைதிலி தாக்கூர் இதில் தனித்து நிற்பது ஏன்? செவ்வியல் இசையையும் நாட்டுப்புறப் பாடல்களையும் கலந்து பாடி, சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கும் இந்தப் பாடகி, தற்போது பா.ஜ.க. வேட்பாளராக அரசியல் களத்தில் குதித்துள்ளார்.
தர்பங்காவில் உள்ள அலினகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மைதிலி, தனது குரலால் மிதிலாஞ்சலின் பெருமையை ஒரு தசாப்த காலமாக டிஜிட்டல் உலகில் எதிரொலித்து வருகிறார். அவரது அரசியல் பிரவேசம், பீகார் தேர்தல் களத்தில் உள்ள இளம் வேட்பாளர்களில் ஒருவராக அவரை முன்னிறுத்துகிறது.
மைதிலியின் எழுச்சி: எளிய கிராமியப் பாடலில் ஒரு புரட்சி
மைதிலி தாக்கூர் பீகார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு குடும்ப உறுப்பினராகவே அறியப்படுகிறார். இதற்கு முக்கியக் காரணம், அவர் மைதிலி, போஜ்பூரி, இந்தி மற்றும் சூஃபி மரபுகளில் வேரூன்றிய பாடல்களைப் பாடுவதேயாகும். அவர் பாரம்பரிய 'சோஹார்', போஜ்பூரி 'நிர்குன் கீத்', ராம்-சீதா விவாஹ கீதங்கள், பஜனைகள், சத் கீதங்கள் மற்றும் கஸல் பாடல்களைத் தனது சகோதரர்கள் ரிஷவ் மற்றும் ஆயாச்சி ஆகியோரின் துணையுடன் பாடி வருகிறார்.
போஜ்பூரி இசையுலகில் ஆபாசமான வரிகள் மற்றும் கவர்ச்சிகரமான சித்தரிப்புகளுடன் பலர் அரசியலுக்கு வரும்போது, மைதிலி தாக்கூர் அவற்றைத் தவிர்த்து, போஜ்பூரியின் உண்மையான நாட்டுப்புற வேர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடுகிறார். இதுவே அவரைப் பிராந்தியப் பெருமையின் சின்னமாக மாற்றியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது அவர் யூடியூபில் வெளியிட்ட ராமர் பஜனை காணொலிகள் அவரது புகழைப் பன்மடங்கு உயர்த்தின.
தற்போது, அவர் யூடியூபில் 5 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களையும், இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களையும், ஃபேஸ்புக்கில் 14 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களையும் கொண்டுள்ளார். சாதி, சமூக எல்லைகளைத் தாண்டி இவருக்கு இருக்கும் இந்த வரவேற்பு, பா.ஜ.க-வுக்கு ஒரு பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசைக் கல்வி முதல் அரசியல் களம் வரை
மதுபனியின் பெனிபட்டியில் பிறந்த மைதிலி தனது மூதாதையர் வீட்டில் தனது பாட்டி பாடிய நாட்டுப்புற இசையைக் கேட்டு வளர்ந்தார். எட்டு வயதில் தனது தந்தை ரமேஷ் தாக்கூரிடமிருந்து இந்துஸ்தானி செவ்வியல் இசையைக் கற்க டெல்லிக்குக் குடிபெயர்ந்தார். இசை மீதான ஆர்வமே அவருடைய குடும்பத்தை வறுமையிலும் வாடச் செய்தது. "ஆரம்ப நாட்களில், ஒரே ஒரு அறையில் வசித்தபோது, என் கணவரின் இசைப் பயிற்சியும், குழந்தைகளின் பயிற்சியும் அக்கம் பக்கத்தாரைத் தொந்தரவு செய்ததால், நாங்கள் 17 முறை வீடுகளை மாற்ற வேண்டியிருந்தது" என்று அவரது தாயார் பாரதி நினைவு கூர்ந்தார்.
ஆரம்பகாலத்தில், எந்த சிறப்பு ஒலிப்பதிவுக் கருவிகளும் இன்றி, டெல்லியில் உள்ள அவர்களது சாதாரண வீட்டில், ட்ராஃபிகள் மற்றும் ஹார்மோனியம், தப்லாவுடன் படுக்கையில் அமர்ந்து மைதிலியும் அவரது சகோதரர்களும் பாடும் காணொலிகளை அவரது தந்தைதான் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார்.
"மெல்லிசையும், அற்புதமான வரிகளும் கொண்ட போஜ்பூரி நாட்டுப்புற இசையின் அழகான உலகத்தை மக்கள் கேட்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இது தூய போஜ்பூரி, இதைக் கேட்பதும் அவசியம் (Ye theth Bhojpuri hai. Ise sunana bhi zaroori hai)," என்று அவரது தந்தை கூறியதுதான் அவர்களது பயணத்தின் தாரக மந்திரம், என்று மைதிலி 2018-இல் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
2015-இல், டெல்லியின் பால் பாரதி சர்வதேசப் பள்ளியில் பயின்று பாரதி கல்லூரியில் பட்டம் பெற்ற மைதிலி , 'இந்தியன் ஐடல் ஜூனியர்' நிகழ்ச்சியில் பங்கேற்றார், ஆனால் இரண்டாவது சுற்றில் நிராகரிக்கப்பட்டார். மனம் தளராமல், ஒரு வருடம் கழித்து 'ஐ-ஜீனியஸ் யங் சிங்கிங் ஸ்டார்ஸ்' (i-genius Young Singing Stars) போட்டியில் பங்கேற்று வென்றார். அதற்கான பரிசு ஒரு இசை ஆல்பம் ஒப்பந்தமாகும்.
அவரது முதல் ஆல்பமான 'யா ரப்பா' (Ya Rabba) க்குப் பிறகு, அவர் தில்ஜீத் தோசாஞ், ஷங்கர் மகாதேவன் மற்றும் நீதி மோகன் ஆகியோர் நடுவர்களாக இருந்த 'ரைசிங் ஸ்டார்' (Rising Star) நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இருப்பினும், உலகம் முழுவதும் அவர் கச்சேரிகளை நடத்தக் காரணமாக அமைந்தது, அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பழைய நாட்டுப்புறப் பாடல்களின் மறு ஆக்கங்களே ஆகும்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாட்னாவில் பா.ஜ.க-வில் இணைந்த மைதிலி, "பிரதமர் மோடியால் நான் ஈர்க்கப்பட்டேன், மக்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன். கட்சி தனக்குக் கட்டளையிடுவதையே செய்வேன்" என்றும், "கட்சியின் சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்" என்று கூறினார்.
மைதிலியின் இந்தத் தனித்துவமான இசைப் பயணம் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றதோடு, 2023-இல் தேர்தல் ஆணையத்தின் மதுபனி பிராண்ட் தூதராகவும், 2024-இல் மத்திய அரசின் 'கலாச்சாரத் தூதுவர் விருதுக்கும்' (Cultural Ambassador of the Year Award) அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அலினகரின் அரசியல் வரலாறு
மைதிலி தாக்கூர் போட்டியிடும் அலினகர் தொகுதியை 2020-இல் விகாஸ்ஷீல் இன்சான் கட்சியின் மிஷ்ரி லால் யாதவ் வெற்றி பெற்றார். பின்னர் பா.ஜ.க-வுக்கு மாறிய யாதவ், தாக்குதல் வழக்கில் நீதிமன்ற தண்டனைக்குப் பிறகு மே மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் சமீபத்தில் பா.ஜ.க-வை "தலித் எதிர்ப்புக் கட்சி" என்று கூறி ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
மைதிலி தாக்கூரின் இசைப் பின்னணியும், சமூக ஊடகங்களில் அவருக்கு இருக்கும் மகத்தான செல்வாக்கும், பீகார் அரசியலில் அவருக்கு ஒரு தனித்துவமான இடத்தை அளிக்கிறது.
இந்த செய்தியை ஆங்கில மொழியில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.