பீகார் முதல்வர் நிதிஷ்குமார், திடுதிப்பென ராஜினாமா செய்திருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லாலுவுடன் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம்!
ரயில்வே துறை அமைச்சராக லாலு இருந்தபோது 2006-ம் ஆண்டு உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்தது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. கடந்த 7-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
மேலும், லாலுவுக்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. இந்த முறைகேடு புகார் எழுந்ததிலிருந்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையே பூசல் உருவானது. மேலும் துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் எனவும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி நிர்வாகிகளே வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஜூலை 26 அன்று (புதன் கிழமை) நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேஜஸ்வி யாதவ் பதவி விலக மாட்டார். தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதிஷ்குமார் சொல்லவில்லை. எனக்கும் நிதிஷ் குமாருக்கும் எந்தவித மனக்கசப்பும் இல்லை. ஊடகங்கள் எங்களது கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றன. நாங்கள் தான் மெகா கூட்டணியை உருவாக்கி, நிதிஷ் குமாரை முதலமைச்சராக்கினோம். அப்படியிருக்கையில், பிரிய வேண்டும் என நாங்கள் எப்படி நினைப்போம்?” என கூறினார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “நான் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் கூறவில்லை. பாஜக அல்லாத மாநிலங்களில் அரசை நிலையற்றதாக பாஜக மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.”, என கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்ட அரசு விழா ஒன்றில் தேஜஸ்வி யாதவ் திட்டமிட்டபடி கலந்துகொள்ளவில்லை. இதனால் பீகார் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் இன்றே (ஜூலை 26) அவசரமாக ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நிதிஷ்குமார் கூட்டினார். அதில், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட தேஜஸ்வி யாதவை துணை முதல்வராக வைத்துக்கொண்டு முதல்வர் பதவியில் தொடர தான் விரும்பாததை வெளிப்படையாக கூறினார் நிதிஷ். அதைத் தொடர்ந்து மாலையே பீகார் கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நிதிஷ் வழங்கினார். இதனால் பீகாரில் அரசியல் நடவடிக்கைகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. தேசிய அளவில் அனைவரின் பார்வையும் பீகாரை நோக்கி திரும்பியிருக்கிறது.