பீகார் மாநிலம் அர்வாலில் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ராவை அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தித் செய்தித் தாளான ராஷ்ட்ரிய சஹாரா பத்திரிகையில் பணியாற்றிவரும் பங்கஜ் மிஸ்ரா என்பவரை, அர்வால் பகுதியில் உள்ள வங்கி ஒன்றிலிருந்து வெளியில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டனர். வங்கியிலிருந்து அவர் ஒரு லட்சம் ரூபாய் எடுத்து வந்திருக்கிறார். அந்தப் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கிலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மர்ம நபர்கள் சுட்டதில் இரண்டு குண்டுகள் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா மீது பாய்ந்தன. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பங்கஜ் மிஸ்ரா பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ், பெங்களூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பீகாரில் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.