முஸ்லிம் மத அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் புகார்: மகன்களுடன் இந்து மதத்தை தழுவிய முஸ்லிம் வழக்கறிஞர்

”பஜரங் தளம் அமைப்பினர் எனக்கு இந்து மதம் குறித்து எடுத்துக் கூறினர். அப்போதுதான் இந்து மதம் என்பது மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் நடைமுறை...

பீகாரில் கோவில்களுக்கு நன்கொடை அளித்ததால், முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்ததாக கூறி, முஸ்லிம் வழக்கறிஞர் ஒருவர் தன் இரு மகன்களுடன் இந்து மதத்திற்கு மாறியுள்ளார். விரைவில் அவருடைய மனைவியும் மதம் மாற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பேஹூசராய் மாவட்டத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் முகமது அன்வர். அப்பகுதியில் முஸ்லிம் மதத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். வழக்கறிஞர் முகமது அன்வர் அங்குள்ள கோவில்களுக்கு அடிக்கடி செல்வார் எனவும் கோவில்களுக்கு நன்கொடை அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்து அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கும் அவர் செல்வார் என தெரிகிறது. அதனால், அக்கம்பக்கத்திலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் அவருக்கு தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து முகமது அன்வர் பேசியபோது, “இந்த பகுதியில் 18 வருடங்களாக வசிக்கிறேன். நான் சுதந்திரமானவன். மசூதிக்கு செல்லும் அதேவேளையில் கோவில்களுக்கும் செல்வேன். அதனால் இங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் எனக்கு தொந்தரவு தருகின்றனர். மத பழக்கவழக்கங்களை நான் சரியாக கடைபிடிப்பதில்லை என கூறி என்னை துன்புறுத்துகின்றனர்.”, என தெரிவித்தார்.

மேலும், அவர் பேசும்போது, “நான் இங்குள்ள கோவில்களுக்கு நன்கொடை அளித்துள்ளேன். அதனால்தான் முஸ்லிம்கள் என்னை துன்புறுத்துகின்றனர். நான் ஏன் மாட்டுக்கறியை உண்பதில்லை எனவும், என் மகன்களை ஏன் மதரஸாக்களுக்கு படிக்க அனுப்புவதில்லை எனவும் கேட்டுதொல்லை தருகின்றனர். பல சமயங்களில் வீட்டின் முன் எலும்புகளையும் அவர்கள் வீசிவிட்டு செல்கின்றனர்.”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், முஸ்லிம் மதத்தை முறையாக பின்பற்றாவிட்டால் தான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டல்கள் வருவதாகவும் முகமது அன்வர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர் இதுகுறித்து அங்குள்ள உள்ளூர் பஜரங் தளம் அமைப்பினரிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. ”பஜரங் தளம் அமைப்பினர் எனக்கு இந்து மதம் குறித்து எடுத்துக் கூறினர். அப்போதுதான் இந்து மதம் என்பது மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் நடைமுறை என்பது.”, என முகமது அன்வர் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி முகமது அன்வர் மற்றும் அவரது 2 மகன்கள் வேத முறைப்படி இந்து மதத்தை தழுவினார். தன்னுடைய பெயரை ஆனந்த் பாரதி எனவும், தன் மகன்களின் பெயரை சுமன் பாரதி, அமன்பாரதி எனவும் மாற்றிக்கொண்டார். அவருடைய மனைவியும் விரைவில் இந்து மதத்தை தழுவுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

தன்னை இந்து மதத்திற்கு மாறுமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும், யாருடைய தூண்டுதலாலும் தான் மதம் மாறவில்லை எனவும் அவர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தார்.

இதுகுறித்து பஜரங் தளம் அமைப்பின் உள்ளூர் தலைவர் சுபம் பரத்வாஜ் என்பவர் பேசும்போது, “தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் மதம் மாறியுள்ளார். அவருடைய இந்த சேவை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது”, என கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close