குடியரசுத் தலைவர் தேர்தல், வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத் தலைவர் நஸீம் ஜைதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகள், வேட்பாளருக்கான தேர்வில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஏற்கனவே, எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை முன்னிறுத்த முடிவுசெய்துள்ளன.
இதையடுத்து, பா.ஜ.க தன்னுடன் இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வேட்பாளரை முடிவு செய்ய உள்ளது. இதற்காக பா.ஜ.க தலைவர் அமித்ஷா, மூன்று பேர் கொண்ட குழுவை இன்று அமைத்துள்ளார்.
அந்தக் குழுவில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி மற்றும் வெங்கைய நாயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள், தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வேட்பாளரைத் தேர்வுசெய்யவுள்ளனர்.