ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, உள்ளூர் பா.ஜ.க. தலைவர் உட்பட இருவர் கைதாகினர். மேலும், ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராம்கர் எனுமிடத்தில் அலிமுதின் அன்சாரி என்பவர், கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி, வாகனத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டு சுமார் 10 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும், அவரது வாகனத்திற்கும் அந்த கும்பல் தீ வைத்தது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் கொலை செய்யப்படுவதை பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் எச்சரித்த அன்றைய தினமே, மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் பஜரங் தளம் மற்றும் பசு பாதுகாவலர்கள் சமிதி அமைப்பினருக்கு தொடர்பிருப்பதாக கொலையானவரின் குடும்பத்தினர் காவல் துறையினரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக நித்தியானந்த் மஹாதோ எனும் உள்ளூர் பா.ஜ.க. தலைவரையும், சந்தோஷ் சிங் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சோட்டு ரானா என்பவர் இந்த வழக்கு சம்பந்தமாக ராம்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த கொலை சம்பவத்தால் கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலைமை கட்டுக்குள் வந்தும், அசம்பாவிதங்களை தவிர்க்க மேலும் அங்கு கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.