பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டதின் இறுதி நாளான நாளை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் 1400 பேர், சட்டப்பேரவை மேல்சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள், பாஜக மாநில தலைவர்கள், செயலாளர்கள் என சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த செயற்குழுவில் வரவிருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச பேரவை தேர்தல்கள், ரோஹிங்யா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்துத்வா கருத்தியலின் சின்னமான தீனதயாள் உபாத்யாயவின் பிறந்தநாள் நாளை வருகிறது. எனவே, அவரது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள், ஜிஎஸ்டி-யை வெற்றிகரமாக அமல்படுத்திய மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தின் நிறைவு நாளான நாளை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அப்போது அரசின் செயல்பாடுகள், நாட்டின் பொருளாதார நிலை, அரசின் நலத்திட்டங்கள், அரசின் நோக்கங்கள் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் இந்த உரை அனைத்து மாநிலங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.