வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில், பாஜக வெற்றிபெற்று 6-வது முறையாக ஆட்சியமைக்கும் என, டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர். நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் புதன் கிழமை அறிவித்தது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அம்மாநிலத்தில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 18-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர். நடத்திய கருத்துக்கணிப்பில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று 6-வது முறையாக ஆட்சியமைக்கும் என்பது தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பின் விவரங்கள்:
182 இடங்கள் உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக 118-134 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 49-61 இடங்களையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக அதிகமான இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டாலும், குஜராத்தில் ஆட்சியமைக்க 150 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்துக்கணிப்பில், 52 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிப்போம் எனவும், 37 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்போம் எனவும் கூறியுள்ளனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் பெரும் மாற்றத்தை சந்திக்காது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பாஜகவின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் (48%-52%) அதிகரிக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலைவிட, 2 சதவீதம் குறையும் (39%-37%) என அதில் கூறப்பட்டுள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால், வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது என 42% பேரும், மிகவும் மோசமடைந்துள்ளதாக 40% பேரும், எந்தவித மாற்றமும் நிகழவில்லை என 18% பேரும் தெரிவித்துள்ளனர்.