தென் இந்தியாவில் வலுவாக கால்பதிக்க 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னரே பாஜக திட்டமிட்டது. தற்போது இந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது.
ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கண்காணிப்பின் கீழ் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகா என திட்டம் விரிகிறது.
இந்தத் திட்டத்தின்படி பிராந்திர தலைவர்களை வளைப்பது, ஒத்துவராத கட்சிகளை பிரிப்பது, புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள், மாவட்ட அளவிலான தலைவர்களை கட்சிக்கு கொண்டுவருவது என திட்டம் இன்றளவும் தொடர்கிறது.
அண்மைக் காலமாக பாஜக இந்தத் திட்டத்தில் தீர்க்கமாக இருப்பதை பார்க்க முடிகிறது. 2024 மக்களவை தேர்தலை கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனர். இதற்காக திட்டத்தில் முக்கிய சில திருத்தங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி வடக்கில் எடுபட்ட இந்துத்துவா மாடலை சற்று ஒதுக்கிவைத்துள்ளனர். மாறாக பிராந்திய தலைவர்கள் விவகாரத்தில் கவனம் செலுத்துகின்றனர்.
தென் இந்தியாவில் வாரிசு அரசியல் அசுர பலத்துடன் திகழ்கிறது. தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு என வாரிசு அரசியல் தலைவர்கள் வலிமையுடன் திகழ்கின்றனர்.
கேரளத்திலும் இந்த வாரிசு அரசியல் துளிர்விடத் தொடங்கியுள்ளது. ஆகையால் காங்கிரஸ் முக்த் பாரத் (காங்கிரஸ் இல்லாத இந்தியா) என்ற திட்டத்தை தெற்கில் ஒதுக்கிவைத்துவிட்டு தற்போது வாரிசு இல்லாத அரசியல் என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளனர்.
முன்னதாக ஹைதராபாத் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,வாரிசு அரசியலை கடுமையான சாடினார். இந்தியா முழுக்க ஒரு குடும்பம் ஊழல், சுரண்டல் அரசியலில் ஈடுபட்டது.
அவர்களின் கூட்டாளிகள் சிலர் மாநில அரசியலில் சிறிய முதல் பெரிய ஊழல்கள் வரை செய்தனர். இந்த வாரிசு அரசியல் உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை தொடர்கிறது.
இவர்கள் இளைஞர்கள் அரசியலலுக்கு வருவதை விரும்புவதில்லை. தங்கள் குடும்பம் மட்டுமே அரசியலில் தலைமை பொறுப்புகள் உள்பட முக்கிய பொறுப்புகளில் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்றார்.
கடந்த காலங்களில் பாஜக தென் இந்தியாவில் மாநில அளவிலான அரசியலில் மட்டுமே ஈடுபட்டது. தற்போது பாஜக தனது பார்வையை மாற்றியுள்ளது. கிராமம் முதல் மாவட்டம் வரை, மாவட்டம் முதல் மாநிலம் வரை என பகுதி பகுதியாக பொறுப்புகளில் இளைஞர்களை சேர்த்துவருகிறது.
மத்திய அமைச்சர்களான எஸ் ஜெய்சங்கர், அஸ்வினி குமார் மற்றும் ஷோபா உள்ளிட்டோர் நாடாளுமன்ற மக்களவை தொகுதி நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா தொகுதிகளின் நிர்வகிக்கும் பொறுப்பை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இந்தப் பகுதியில் தீவிர கட்சிப் பணிகளில் கவனம் செலுத்திவருகின்றனர். அதுமட்டுமின்றி கர்நாடக மாநிலத்துக அடுத்தப்படியாக பாஜக ஆட்சி அமைக்க சாதகமான மாநிலமான தெலங்கானா திகழ்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வடக்கில் அடர்த்தியாக வசிக்கும் வன்னியர்கள் பக்கம் பாஜக கவனத்தை திருப்பியுள்ளது. அதன்படி, கிட்டத்தட்ட 150 சட்டப்பேரவை தொகுதிகளை இலக்காக நிர்ணயித்து செயல்படுகிறது.
எனினும் கடந்த காலங்களில் தென் இந்திய மாநிலங்களில் பாஜக பெயர் சொல்லும் அளவுக்கு கூட வெற்றிப் பெறவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி, ரஜினி காந்த் ஆதரவு இழப்பு, கேரளத்தில் ஈழவர்களின் ஆதரவு இயக்கமான பாரத் ஜன சேனாவிற்கு போதியளவு வாக்குகள் கிடைக்காமை என தள்ளாடியது.
ஆனால் தெலங்கானாவில் குறிப்பிட்ட வெற்றியை பெற்றது. சட்டப்பேரவை தேர்தலில் எட்லா ராஜேந்தர்-ஐ நிறுத்துகிறது. இவர் மாநில முதலமைச்சரும் ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவருமான கே. சந்திர சேகர ராவ்வின் நெருங்கிய நண்பர் ஆவார்.
இதற்கிடையில் பாஜகவின் தென் இந்திய திட்டத்தின் ஒரு பகுதியாக இசைஞானி இளையராஜா, கேரளத்தின் தடகள வீராங்கனை பி.டி. உஷா, கர்நாடக புரவலர் டாக்டர். வீரேந்திர ஹெக்டே மற்றும் ஆந்திராவின் கே.வி. விஜயேந்திர பிரசாத் ஆகியோருக்கு மாநிலங்களவை நியமன எம்பி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் எல்லாரும் அவரவர் துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்தவர்கள். அந்த வகையில் பாஜகவின் தென் இந்தியத் திட்டத்தில் இது தொடரும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மேலும் தென் இந்தியாவில் சக்தி வாய்ந்த பெண்கள் இதுவரை ஆட்சியில் இருந்துள்ளதால், பெண் வாக்காளர்களை கவரும் புதிய திட்டங்களிலும் பாஜக கவனம் செலுத்திவருகிறது. மேலும் கட்சியில் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கும் பொறுப்புகள் வழங்க திட்டமிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil