மது அருந்தியிருப்பதை சோதனை செய்யும் கருவி 100% துல்லியமான முடிவுகளை தராது: டெல்லி நீதிமன்றம்

மது அருந்தியிருப்பதை சோதிக்கும் மூச்சு பகுப்பாய்வு உள்ளிட்ட கருவிகள் 100 சதவீதம் துல்லியமான முடிவுகளை அளிக்காது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்தது.

ஒருவர் மது அருந்தியிருக்கிறாரா என்பதை சோதிக்க போக்குவரத்து காவல் துறையினர் உபயோகிக்கும் மூச்சு பகுப்பாய்வு உள்ளிட்ட கருவிகள் 100 சதவீதம் துல்லியமான முடிவுகளை அளிக்காது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்தது. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறி தொடரபட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு இறண்டு நாட்கள் சிறைத்தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டபோது டெல்லி நீதிமன்றம் இதனைக் கூறியது.

31 வயதான விவேக் ஸ்ரீவஸ்தா என்பவர் மீது, மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185-ன் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம், விவேக் ஸ்ரீவஸ்தாவிற்கு இரண்டு நாட்கள் சிறைத்தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மூச்சு பகுப்பாய்வு கருவியின் மூலம் அவருடைய ரத்தத்தில் 68.8 மில்லிகிராம்/100 மில்லி லிட்டர் என்ற அளவில் இருந்ததாக தெரிகிறது. அதனடிப்படையில் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது. இந்த தண்டனையில் 2,000 ரூபாய் அபராதத்தை அவர் செலுத்திவிட்டார்.

இந்நிலையில், இரண்டு நாட்கள் சிறைத்தண்டனையை ரத்து செய்யுமாறு டெல்லி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், அவரது மனைவி வாழ்வாதாரத்திற்கு தன்னை நம்பியே உள்ளதால், சிரைத்தண்டனையிலிருந்து தனக்கு விலக்களிக்குமாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை செவ்வாய் கிழமை விசாரித்த டெல்லி நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி லோகேஷ் குமார் ஷர்மா, மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் சிறைத்தண்டனை அளித்தது கடுமையான தண்டனை என கூறினார்.

மேலும், ”இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் மூச்சு பகுப்பாய்வு கருவியானது 100 சதவீத முடிவுகளை அளிக்காது. மின் சாதனத்தில் நிகழக்கூடிய பிழையின் விளிம்பை கருத்தில் கொள்ளாததால், அதன் மூலம் தரப்படக்கூடிய முடிவுகள் துல்லியமாக இருக்காது”, என நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரருக்கு வழங்கப்பட்ட இரண்டு நாட்கள் சிறைத்தண்டனையை நீதிபதி ரத்து செய்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close