டோக்லாம் எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே இருந்துவந்த மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு செல்கிறார். அங்கு செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாமில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே சுமார் இரண்டரை மாதம் போர் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில், இந்த பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்பட்டது. இதன் மூலம் இரு நாடுகளும் தங்களது படைகளை டோக்லாம் பகுதியில் இருந்து திருப்பப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், சீனாவில் தொடங்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்கிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் 9-வது உச்சி மாநாடு செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கி, 5-ந் தேதி முடிவடைகிறது.
சீனாவின் புஜியன் மாகாணத்தில் உள்ள ஸியபமின் நகரில் நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாட்டில், கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் மிச்செல் டெமர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
இந்த பிரிக்ஸ் மாநாட்டின் இடையே சீன அதிபார் ஜின்பிங், பிரமதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 5-ம் தேதி சீனப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி மியான்மருக்கு 7-ந் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.