பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவில் இன்று தொடங்குகிறது. அதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை சீனா செல்லவுள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை பிரிக்ஸ் உச்சி மாநாடு நடத்தப்பட்டு, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். மாநாட்டில் அந்தந்த நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை கோவாவில் இந்தியா நடத்தியது. அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சீனா செல்லவுள்ளார். சீனாவுடனான டோக்லாம் எல்லை பிரச்னை முடிவுக்கு வந்த பின்னர், பிரதமர் மோடி அந்நாட்டுக்கு செல்வதால் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாநாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
ரிக்ஸ் மாநாட்டில் புதிய நாடுகளை உறுப்பினர்களாக சேர்க்க சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா தனது முயற்சியை கைவிட்டுள்ளது. அதேபோல், சீனாவின் கனவு திட்டமான "ஒரே மண்டலம் ஒரே சாலை" திட்டத்தை பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் மூலம் கொண்டு வர சீனா முயற்சி மேற்கொள்கிறது. இத்திட்டத்தின் கீழ், பாகிஸ்தானின் குவாதர் துறைமுகம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் வருவதால் இந்த திட்டத்திற்கும் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து மியான்மர் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார். பிரதமராகப் பதவியேற்ற பிறகு மியான்மருக்கு மோடி செல்வது இது இரண்டாவது முறையாகும்.
மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டில், ரோஹிங்யா இனத்தவருக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆங் சான் சூகி தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.