அண்ணன் - தங்கை உறவுகளைக் கொண்டாடுவதற்காக வட மாநிலங்களில் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வரும் தினமாகும். அன்றைய தினம் சகோதரிகள் அனைவரும் தங்கள் சகோதரர்களின் கையில் வண்ணமயமான ‘ராக்கிகள்’ எனும் கயிற்றை கட்டி மகிழ்வர். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை வாழ்நாள் முழுதும் பாதுகாப்பேன் என உறுதிக்கூறும் நிகழ்வே ரக்ஷா பந்தன். இந்த தினம், தற்போது தென் மாவட்டங்களிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள் கடைகளில் அணிவகுக்கும்.
இந்தாண்டு ரக்ஷா பந்தன் தினம் வரும் 7-ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தங்கள் சகோதரர்களுக்காக அழகான ராக்கிகளை வாங்க இப்போதே சகோதரிகள் கடைகளுக்கு படையெடுக்கத் துவங்கிவிட்டனர்.
ரக்ஷா பந்தன் அன்று, சகோதரிகளுக்கு, அவர்களின் சகோதரர்கள் தங்களால் முடிந்த பணம் அல்லது ஏதேனும் ஒன்றை பரிசாக வழங்க வேண்டும்.
ஆனால், உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஏராளமான ஆண்கள், தங்கள் சகோதரிகளுக்கு கழிவறைகளை பரிசளிக்க திட்டமிட்டுள்ளனர். அம்மாவட்ட சுகாதார துறை இம்மாதிரியான திட்டத்தை வகுத்தது. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கவே இப்படியொரு திட்டத்தை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் இதுவரை 900 பேர் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பங்கு கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் மூன்று பேருக்கு அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை பரிசு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு சுகாதார சர்வேயில், உத்தரப்பிரதேச மாநிலம் மிகவும் மோசமான நிலைமையை வகித்தது. அதனால், 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலுமாக ஒழிக்க அம்மாநில அரசு திட்டம் தீட்டியது. அதன் ஒரு பகுதியாகவே இதனை செயல்படுத்த உள்ளது.