ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காமில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக, ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க யாத்திரை சென்றுவிட்டு குஜராத் மாநில யாத்ரீகர்கள், திங்கள் கிழமை ஜம்முவுக்கு பேருந்தில் திரும்பி கொண்டிருந்தனர். பேருந்து அனந்த்நாக்கின் கானாபால் எனுமிடத்திற்கு வந்தபோது, அதன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் ஆறு பேர் உள்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர். முன்னதாக, காவல்துறையினர் வந்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல் துறையினர் அதற்கு தக்க பதிலடி கொடுக்க முயன்றபோது, தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதற்கு பின்னரே, யாத்ரீகர்கள் வந்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு செவ்வாய் கிழமை கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதல் செய்தி அறிந்து தான் மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்தார். மேலும், இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றும் மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில், ராணுவ வீரர்கள் செவ்வாய் கிழமை மாலையிலிருந்து விடியவிடிய தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது, தீவிரவாதிகள் சிலர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புத்காம் பகுதியில் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தேடுதல் வேட்டை புதன் கிழமை காலை வரை நீடித்தது. இதையடுத்து புத்காம் பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள் அங்கு பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஜாவத், அக்விப், தாவூத் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்த முழு விவரங்கள் வெளியாகவில்லை.