Union Budget 2023 Tamil News: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை இன்று நாடாளுமன்ற மக்களவையில் வெளியிட்டார். அதன்படி, பாதுகாப்பு துறைக்கு ரூ. 5.93 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். முந்தைய நிதியாண்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.5.25 லட்சம் கோடியாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட் மதிப்பீடுகளை விட அது 12.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
நவீனமயமாக்கல் நிதிகள் 6.57 சதவீதம் உயர்ந்து ரூ. 1.62 லட்சம் கோடியாக இருந்தாலும், வருவாய் வரவு-செலவுத் திட்டம் - பாதுகாப்புப் பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் உட்பட - சுமார் 17.39 சதவீதமும் அதிகரித்துள்ளது.
முதன்முறையாக அக்னிபாத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.4266 கோடியும் இதில் அடங்கும். இத்திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது மற்றும் மூன்று சேவைகளில் உள்ள அக்னிவீரர்களின் முதல் தொகுதி தற்போது பயிற்சியில் உள்ளது.
வருவாய் வரவுசெலவுத் திட்டத்தில் முக்கிய உயர்வு, ஆயுதங்கள், தளங்கள் மற்றும் ஆயுதப் படைகளின் உபகரணங்களைப் பராமரிப்பதற்கான செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்படும் கடைகள், செயல்பாட்டு தயார்நிலை, போக்குவரத்து மற்றும் வேலைகள் போன்ற கூறுகளுக்குச் சென்றுள்ளது.
ஆயுதப் படைகளுக்கான நவீனமயமாக்கல் பட்ஜெட்டில், இந்திய விமானப்படை (IAF) மூன்று சேவைகளில் அதிகபட்சமாக ரூ. 0.57 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. இருப்பினும், இது 2022-23 நிதியாண்டில் இருந்து வெறும் 3.6 சதவீதம் மட்டுமே அதிகம் ஆகும்.
இந்திய ராணுவத்திற்கு ரூ.0.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து 15.6 சதவீதம் உயர்வு ஆகும். இந்திய கடற்படைக்கு ரூ.0.52 லட்சம் கோடி மூலதன பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. இது முந்தைய நிதியாண்டை விட 10.6 சதவீதம் அதிகமாகும்.
பாதுகாப்பு ஓய்வூதியங்கள் 2022-23ல் ரூ.1.19 லட்சம் கோடியிலிருந்து 16 சதவீதம் அதிகரித்து ரூ.1.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் திருத்தம் மற்றும் 2019 முதல் 2022 வரை ரூ. 23638 கோடி நிலுவைத் தொகையுடன் கூடிய ஓய்வூதியங்கள் அதிகரிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உத்வேகத்துடன், எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.3500 கோடியாக இருந்தது.
7 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு 1310 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்திய கடலோர காவல்படையின் பட்ஜெட் 2023-34 க்கு 7310 கோடி ரூபாயில் இருந்து 7197 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil