இந்தியாவிலேயே முதன்முறையாக மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் என அழைக்கப்படும் அதிவேக ரயிலுக்கான திட்டப்பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே-வும் இணைந்து வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினர்.
இந்த பணிகள் இந்தியா 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும்போது, அதாவது 2022-ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கனவு திட்டமான ‘புல்லட் ரயில்’ குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் இதோ:
1. இத்திட்டத்திற்காக 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 85 சதவீத தொகையை ஜப்பான் அரசு அளிக்கும் என, முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2. 2023-ஆம் ஆண்டு இத்திட்ட பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், 2022-ஆம் ஆண்டிலேயே இப்பணிகள் நிறைவடையும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.
3. புல்லட் ரயிலில் பயணிக்க எவ்வளவு கட்டணம் என்பது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனாலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் கட்டணம் இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜ்தானி எக்ஸ்பிரஸில் ஏசி 2 டயர் பெட்டியில் பயணிக்க எவ்வளவு கட்டணமோ, அதனுடன் ஒப்பீட்டளவிலான தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
4. மும்பை – அகமதாபாத் இடையே 12 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கும். ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் இடையேயான பயண நேரம் 165 நொடிகள் மட்டுமே.
5. ஆரம்பத்தில் இந்த ரயிலில் 10 பெட்டிகள் அமைக்கப்படும் எனவும் அதனால், 750 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும் எனவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது அதைவிட 6 பெட்டிகள் அதிகமாக அமைத்தால், 1,250 பயணிகள் பயணிக்க முடியும் என ரயில்வே துறை திட்டம் தீட்டி வருகிறது.
6. மொத்தமாக 35 புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 24 புல்லட் ரயில்கள் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும். மற்றவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.
7. மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இரு நகரங்களுக்கிடையே ரயிலில் பயணிக்க 2 மணிநேரங்கள் 7 நிமிடங்கள் செலவாகும். இந்த பயண நேரத்தை புல்லட் ரயில் குறைக்கும்.
8. இந்த புல்லட் ரயில் ஒரு மணிநெரத்துக்கு 320 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும். அதிகபட்சமாக, ஒரு மணிநேரத்துக்கு 350 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.
9. புல்லட் ரயிலில் சக்கர நாற்காலி பயணாளிகளுக்கு என 2 கழிவறைகள் கூடுதலாக இருக்கும். மேலும், தாய்மார்கள் பாலூட்டுவதற்காகவும், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என உதவி தேவைப்படுபவர்களுக்கென தனி அறை இருக்கும்.
10. புல்லட் ரயில் திட்டத்தால் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய அரசு கூறுகிறது.
இதையும் படியுங்கள்: உண்மையில் புல்லட் ரயில் திட்டத்தால் இந்தியாவுக்கு பயணிருக்கிறதா? பட்டியலிடும் தமிழிசை!