பாஜக வெளியிட்ட புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில், சி.டி ரவி பெயர் இடம்பெறவில்லை. கர்நாடக மாநில பா.ஜ.க தலைவராக இவர் நியமிக்கப்பட உள்ளதால்தான் இவர் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
பாஜகவில் புதிய தேசிய நிர்வாகிகளை நியமித்து, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று அறிப்பை வெளியிட்டார். புதிய பட்டியலில் 13 துணை தலைவர்கள், மற்றும் 9 தேசிய பொதுச் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த பட்டியலில் சி.டி ரவி பெயர் இடம்பெறவில்லை.
கார்நாடக பாஜக மாநில தலைவராக உள்ள நலின் குமார் கட்டீல் பதவிக் காலம் வருகின்ற ஆகஸ்டு மாதத்தோடு முடிவடைகிறது. இந்நிலையில் இந்த பதவிக்கு சி.டி ரவி தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
கர்நாடகாவின் சிக்மகளூர் பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சி.டி ரவி சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் இவர் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்பதில் உள்கட்சியிலேயே சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் லிங்காயத் சமூகத்தின் தலைவர் எடியூரப்பாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்கூட இவர்களுக்கு இடையே உள்ள முரண்பாடு வெளியே தெரிந்தது. சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து ரவி பேசுகையில் “ உள்கட்சியினர் சிலர் எதிர்கட்சியுடன் கூட்டணி வைத்துதான் தன்னை தோல்வியடைச் செய்ததாகவும்’ குற்றம் சாட்டியுள்ளார்.
சிறந்த நிர்வாகத் திறன் சி.டி ரவியிடம் இருந்தாலும், இவருக்கு எந்த சாதிய வாக்கு வங்கியும் இல்லை. குறிப்பாக எடியூரப்பாவிற்கு லிங்காயத்துகளின் வாக்கு வங்கி உள்ளது.
மேலும் இவர் சார்ந்திருக்கும் வொக்கலிகர் சமூகத்திலும் இவருக்கு அதிக ஆதரவு கிடைக்கவில்லை. லிங்காயத் சமூகம் மற்றும் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் மற்றும் எதிர்கட்சி தலைவராகவும் சரிசமாக நியமிக்க வேண்டும் என்று பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக நிர்வாகி கூறுகையில் ” சாதியப் பங்கீடு சரியாக கையாளப்பட வேண்டும். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ( பசவராஜ் பொம்மை அல்லது பசனகவுடா பட்டீல் யத்னாலை) சட்டமன்றத்தில் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டால், வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர் மாநில தலைவராக தேர்ந்தேடுக்கப்படலாம்” என்று கூறியுள்ளார்.
ரவியைத் தவிர வொக்கலிகா சமூகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே மாநில தலைவராக தேர்வு செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“