கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி... மத்திய அரசு ஒப்புதல்

இந்த திட்டத்தின் கீழ் ரூ.6000, மூன்று தவணைகளாக வழங்கப்படும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவந்த மகப்பேறு உதவித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. முதல் குழந்தைக்கு மட்டும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.

கர்ப்பிணிப் பெண்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக தொடர்ந்து வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், குழந்தை பெற்றெடுத்த பின்னரும், ஒய்வெடுக்க முடியாத நிலை உள்ளது. தினக்கூலி வேலை செய்யும் கர்ப்பிணி பெண்கள், பேருகாலத்தின் போது விடுமுறை எடுத்தால், அவர்களுக்கான ஊதியம் பிடிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டும், பெண்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ரூ.6000, மூன்று தவணைகளாக வழங்கப்படும். கருத்தரித்தது குறித்து பதிவு செய்த முதல் மூன்று மாதங்களுக்குள்ளாக ரூ.3,000 வழங்கப்படும். அதன் பின்னர் குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது தவணையாக ரூ.1,500 வழங்கப்படும். குழந்தையின் பிறப்பை பதிவு செய்தல், குழந்தைக்கு பிசிஜி தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவைகளை நிறைவு செய்த அடுத்த மூன்று மாதங்களுக்குள் மூன்றாவது தவணையாக ரூ.1,500 என மொத்தம் ரூ.6,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு அல்லது அஞ்சலக கணக்கில் இந்த உதவித் தொகை நேரடியாக செலுத்தப்படும்.

மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிர்வாகங்களில் நிரந்தரமாக பணியாற்றுபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. அதேபோல, மற்ற திட்டங்களின் கீழ் மகப்பேறு உதவி பெறுபவர்களும் இந்த திட்டத்தின் மூலம் உதவித் தொகை பெற இயலாது.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 51.70 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்குகின்றன. மத்திய அரசின் சார்பில் 60 சதவீதமும், மாநில அரசின் சார்பில் 40 சதவீதமும் நிதி வழங்கப்படுகிறது மேலும், மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவீத நிதியையும் மத்திய அரசே வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close