மம்தா உத்தரவுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை : மொகரம் நாளிலும் துர்கா சிலை கரைப்புக்கு அனுமதி

மம்தா பானர்ஜியின் உத்தரவுக்கு தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், மொகரம் நாளிலும் துர்கா சிலை கரைப்புக்கு அனுமதி கொடுத்தது.

calcutta high court set aside mamata's order, durga idol immersion, calcutta high court, durga pooja, muharram

மம்தா பானர்ஜியின் உத்தரவுக்கு தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், மொகரம் நாளிலும் துர்கா சிலை கரைப்புக்கு அனுமதி கொடுத்தது.

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழா, படு பிரபலம்! இந்த விழாவின் நிறைவில் துர்கா சிலைகளை கடலில் கரைப்பது வாடிக்கை! இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகை வருவதால், அன்று துர்கா சிலை கரைப்புக்கு மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி அரசு தடை விதித்தது. அதேபோல அதற்கு முன் தினமான செப்டம்பர் 30-ம் தேதியும் மாலை 6 மணிக்குள் சிலை கரைப்பு நடவடிக்கைகளை முடித்துக்கொள்ள கடந்த மாதமே அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டது.

மம்தா அரசின் இந்த உத்தரவை, மேற்கு வங்க மாநில பாஜக, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் உள்ளிட்ட சங்பரிவார்கள் கடுமையாக எதிர்த்தனர். ‘மம்தா மத அரசியல் நடத்துவதாகவும், ஓட்டுக்காக மக்களை பிளவுபடுத்துவதாகவும்’ விமர்சித்தார்கள், மாநில பாஜக தலைவர்கள். ‘இந்தத் தடையை தகர்ப்போம்’ என்றும் அவர்கள் அறிக்கை விட்டனர்.

இதை கண்டித்த மம்தா, ‘நெருப்புடன் விளையாடாதீர்கள்’ என சங்பரிவார்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அது மட்டுமல்ல, சில குறிப்பிட்ட அமைப்புகள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிடுவதாகவும் சாடினார் மம்தா.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்றும் இன்றும் (செப்டம்பர் 20, 21) இந்த வழக்கு விசாரணை நடந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி ராகேஷ் திவாரி, ‘மக்கள் (இந்துக்களும் முஸ்லிம்களும்) நல்லிணக்கத்துடன் வாழட்டும். அவர்களுக்கு இடையே கோடு போடாதீர்கள்’ என குறிப்பிட்டார்.

மேற்கு வங்க அரசு தலைமை வழக்கறிஞர் கிஷோர் டத்தா வாதிடுகையில், ‘விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்கும் விதமாகவே இந்த நடவடிக்கையை அரசு எடுக்கிறது’ என நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.அதற்கு நீதிபதி ராகேஷ் திவாரி, ‘சட்டம் ஒழுங்கு கெடும் என நீங்கள் குறிப்பிடுவதற்கு என்ன அடிப்படை முகாந்திரம்?’ என கேள்வி எழுப்பினார்.

மற்றொரு நீதிபதி டாண்டன்-னும், “அங்கு முழு நல்லிணக்கம் உள்ளதாக கூறும் நீங்கள், ஏன் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்து அந்த மக்கள் இடையே பிரிவினையை உருவாக்க வேண்டும்?’ என கேட்டார்.

இந்த நிலையில் இன்று (21-ம் தேதி) இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மொகரம் பண்டிகையான அக்டோபர் 1-ம் தேதி உள்பட தினமும் இரவு 12 மணி வரை துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுத்து உத்தரவிட்டனர். இதற்கான ஊர்வலம் செல்லும் பாதைகளை உறுதிப்படுத்தவும், அது தொடர்பான முறையான அறிவிப்புகளை வெளியிடவும் அரசுக்கு ஆணையிட்டது உயர்நீதிமன்றம்.

மம்தா உத்தரவுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது மேற்கு வங்கத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இதற்கிடையே இந்த உத்தரவுக்கு பிறகு செய்தி ஏஜென்சிகளிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘எனது தொண்டைப் பகுதியை அறுக்கலாம். ஆனால் நான் என்ன செய்யவேண்டும் என்பதை வேறு யாரும் கூற முடியாது. மேற்கு வங்கத்தில் அமைதியை பாதுகாக்க என்ன செய்யவேண்டுமோ, அதை நான் செய்வேன்’ என கூறினார். இதனால் உச்சகட்ட பரபரப்பில் மிதக்கிறது மேற்கு வங்கம்!

 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Calcutta high court set aside mamatas order allows durga idol immersion on muharram day also

Next Story
பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக எழுவோம்: அமெரிக்காவில் காங்., துணைத் தலைவர் ராகுல் பேச்சு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com