பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரால் இன்று திறந்து வைக்கப்படவிருந்த பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணை, கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக தடுப்பணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள காஹல்கான் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக 13.88 கோடி ரூபாய் செலவீட்டில் பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணை கட்டுவதற்கு, கடந்த 1977-ஆம் ஆண்டு திட்ட ஆணையம் அனுமதி அளித்தது. இந்த தடுப்பணை மூலம் பீஹார் மாநிலத்தில் உள்ள 21,700 ஹெக்டேர் விவசாய நிலங்களும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 4,000 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பாசன வசட்ஜி பெறும்.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்த தடுப்பணை கட்டும் பணிகள் தாமதமாகி, செலவீட்டு தொகையும் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில், 389.31 கோடி ரூபாய் செலவீட்டில் பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த தடுப்பணை இன்று (புதன் கிழமை) பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமாரால் திறந்து வைக்கப்படுவதாக இருந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் செவ்வாய் கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், இத்தடுப்பணையின் பெரும்பகுதி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், அணை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது. கடும் வெள்ள நீரோட்டத்தை தாங்க முடியாமல் தடுப்பணை உடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அணை திறந்து வைக்கப்படுவதற்கு முன்பே, வெள்ளப்பெருக்கை தாங்க முடியாமல் உடைந்த நிலையில், அதன் கட்டுமான உறுதியின் மீது பல கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மத்திய நீர்வளத்துறை மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனை ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், “ஊழலால் மற்றுமொரு அணை உடைந்தது”, என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.