இறைச்சிக்காக கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறைச்சிக்காக கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், மத்திய அரசைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், ஹைதராபத்தை சேர்ந்த தனியார் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மாட்டிறைச்சி விற்பனை செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையானது. கிட்டத்தட்ட 4 பில்லின் டாலர் மதிப்பிலான மாட்டிறைச்சி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடைகளை சந்தையில் விற்பனை செய்யக் கூடாது என தடைவிதித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு சட்டத்திற்கு புறம்பானது, பாஜக-வின் இந்துத்துவா கொள்கையினால் வர்த்தகர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அசோக் பூஷன் மற்றும் தீபக் குப்தா அடங்கிய விடுமுறை கால அமர்வு விசாரணை செய்தது. அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தவிட்டது. மேலும், மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்த வழக்கு வரும் ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.