காவிரி வழக்கில் 4 மாநில நிபுணர்களும் ஆஜராகி தங்கள் மாநில கள நிலவரத்தை வாதமாக தெரிவிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. இதன்படி கர்நாடகம் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்கவேண்டும். ஆனால் தமிழகம் இதைவிட கூடுதல் தண்ணீர் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. கர்நாடகாவோ, இந்த அளவுகூட தங்களால் தண்ணீர் விட முடியாது என உச்சநீதிமன்றத்தை அணுகியது. இதேபோல கேரளா, புதுச்சேரி மாநிலங்களும் நடுவர் மன்ற உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடின.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு நிலுவையில் இருக்கிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலிநாரிமன் வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர், கர்நாடகாவின் குடிநீர் தேவை, விவசாய தேவை ஆகியவற்றை பட்டியல் இட்டதுடன், தமிழகம் தண்ணீரை சேமித்து வைக்க முறையான நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அடுத்து தமிழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர்நாப்டே ஆஜராகி வாதிட்டு வருகிறார். அவர் தனது வாதத்தில், ‘தமிழகத்தை பொருத்தவரையில் நிலத்தடி நீர்மட்டம் என்று தனியாக கிடையாது மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரால் மட்டுமே டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கர்நாடகம் இதுவரை உச்சநீதிமன்றத்தின் எந்த ஒரு உத்தரவையும் மதித்ததாக தெரியவில்லை’’ என ஏற்கனவே வாதிட்டார். மீண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதி (இன்று) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘கர்நாடகம் தவறான விவசாய முறைகளால் தண்ணீரை வீணாக்குகிறது’ என ஒரு குற்றச்சாட்டை தமிழக வழக்கறிஞர் முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘தமிழகம் ஏன் நீர் மேலாண்மையில் போதிய கவனம் செலுத்தவில்லை? புதிய அணைகள் கட்டும் வாய்ப்பு தமிழகத்தில் இல்லையா?’ என கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு பதில் தெரிவித்த சேகர்நாப்டே, ‘நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தட்டையான வடிவமைப்பைக் கொண்ட தமிழகத்தில் புதிய அணைகளுக்கு வாய்ப்பு இல்லை என நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்’ என குறிப்பிட்டார். எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட விவசாய அறிஞர்களின் கருத்தையும் தனது வாதத்தில் சேகர்நாப்டே எடுத்துக் கூறினார்.
அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘இந்த வழக்கின் இறுதிகட்டத்தில் 4 மாநில நீர் மேலாண்மை மற்றும் விவசாய நிபுணர்கள் ஆஜராகி தலா 45 நிமிடங்கள் வாதிட வேண்டும். தங்கள் மாநிலத்தின் கள நிலவரங்களை அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும்’ என உத்தரவிட்டார்.
இந்த விசாரணையின்போது, ஆண்டுக்கு 132 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க கர்நாடகா சம்மதம் தெரிவித்தது. ஆரம்பத்தில் நடுவர் மன்றம் உத்தரவிட்ட 192 டி.எம்.சி.க்கு பதிலாக 105 டி.எம்.சி அளவுக்கு தரவே கர்நாடகம் சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.