காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு பின்வாங்கியது ஏன் ? உச்சநீதிமன்றம் கேள்வி

முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பின்னர் அதனை அமைக்காமல் பின்வாங்கியது ஏன்? என உச்ச நீதிமன்றம் ...

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு பின் வாங்கியது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி நதிநீர்ப பங்கீடு தொடர்பாக 2007-ல் காவிரி நடுவர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மூன்று மாநிலங்கள் மனுதாக்கல் செய்திருந்தன. இதில் இறுதி வாதம் நடைபெற்று வருகிறது.முதலில் கர்நாடக அரசும், இதைத்தொடர்ந்து கேரள அரசும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் இறுதி விசாரணையானது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, முன்பு கடந்த மாதம் 11-ம் தேதி முதல் இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது.

மொத்தம் 15 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், 12ம் நாளாக நேற்று விசாரண நடைபெற்றது. இதில், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் தங்களது விவாதத்தை ஏற்கெனவே தெரிவித்துவிட்டன. இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் தமிழகத்தின் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, நேற்று 2-வது நாளாக வாதத்தை தொடர்ந்தார்

அப்போது அவர் வாதிடும்போது: மைசூரு – மதராஸ் ஒப்பந்தப்படி கர்நாடக அரசு செயல்படாமல், அந்த ஒப்பந்தத்தை சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுள்ளது. காவிரி நீரை நம்பித்தான் தமிழக விவசாயிகள் உள்ளனர். காவிரி நீர் இல்லை என்றால், மாநிலத்தின் 33 சதவீததிற்கும் மேலான விவசாய குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காவிரியில் நீரில் உள்ள 50 சதவீத தண்ணீரை நம்பிதான் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில், காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கப்பட்டால் விவசாயம் அழிவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளும் அழியும் நிலை ஏற்படும்.

காவிரியில் அனுமதியின்றி கர்நாடக அரசு தடுப்பணைகளை கட்டுகிறது. இதனை தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. காவிரியில் இருந்து வரும் நீரை முழுமையாக தமிழகத்திற்கு தர வேண்டும் என 1924-ம் ஆண்டு போடப்பட்ட மைசூரு-மதராஸ் ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால், அதன்படி செயல்படாமல் தடுப்பணைகளை கட்டி தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடக அரசு.

காவிரியில் நீரில் 60 டிஎம்சியை கர்நாடகா பயன்படுத்திக் கொள்கிறது. உபரியாக இருக்கும் 9 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழகத்துக்கு தந்துள்ளது. மேட்டூர் அணை வறண்டு காணப்படுவதற்கு காரணமே கர்நாடக அரசு தான். இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாமல், கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது: தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கும் விதமாக தமிழக அரசு ஏன் புதிய அணைகளை கட்டவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சேகர் நாப்தே, அதுபோன்ற புவியியல் அமைப்பை தமிழகம்  பெற்றிருக்கவில்லை என்று பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறும்போது: முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பின்னர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் பின்வாங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினர். தண்ணீருக்காக மாநிலங்கள் பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில் மத்திய அரசு மௌனம் காப்பது என்பது தீர்வாகாது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.  இது குறித்து மத்திய அரசு விரைவில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்றனர்.மேலும், தமிழக அரசின் வாதம் வரும் 16-ம் தேதி தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close