காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு பின் வாங்கியது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி நநிநீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-ல் காவிரி நடுவர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மூன்று மாநிலங்கள் மனுதாக்கல் செய்திருந்தன. இதில் இறுதி வாதம் நடைபெற்று வருகிறது.முதலில் கர்நாடக அரசும், இதைத்தொடர்ந்து கேரள அரசும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுமுன் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தரப்பிலான வாதம் நேற்று தொடங்கியது. தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் சேகர் நாப்டே இன்றும் தொடர்ந்து வாதங்களை முன்வைத்தார்.
அந்த வாதத்தின்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பின்வாங்குகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும், காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பின்னர் ஏன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் பின்வாங்கியது என்று கேள்வி எழுப்பினர். மேலும், மத்திய அரசு இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினர்.