பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி நன் கொடை வசூல் செய்த வீட்டு வசதி சங்கத்தின் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் ஃபாரிதாபாத் உள்ள சங்கம் ஒன்று "நரேந்திர மோடி விச்சார் மன்ச்" என்ற பெயரில் மக்களை ஏமாற்றி அவர்களிடம் நன்கொடை வசூல் செய்து வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவரான ஜே.பி.சிங் மற்றும் சிலர் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிரதமர் மோடியின் புகைப்படத்தைக் கொண்ட http://www.nmvmindia.org என்ற இணையதளத்தையும் இவர்கள் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மோசடி கும்பல் குறித்து தகவலறிந்த சிபிஐ போலீசார், பாரத பிரதமரின் பெயரை தவறுதலாக பயன்படுத்தியது, குற்றவியல் சதி மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜே.பி.சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், பிரதமர் மோடிக்கும் இந்த அமைப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் சிபி'ஐ போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில், பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி கடன் பெற்றுத்தருவதாக கூறி சுயஉதவி குழு பெண்களிடம் பணம் வசூலில் தொண்டு நிறுவனம் ஒன்று ஈடுபட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.