காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சருமான ஜெயந்தி நடராஜன் வீட்டில் தற்போது சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
மன்மோகன்சிங் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசின் இரண்டாவது பதவி காலத்தில், 2011 முதல் 2013 டிசம்பர் வரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தவர் ஜெயந்தி நடராஜன். பெரிய நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்க வேண்டிய துறை இது! இவரது பதவி காலத்தில் சுற்றுச்சூழல் அனுமதிக்காக அதிகம் ‘எதிர்பார்க்கப்பட்டதாக’ அப்போதே புகார் எழுந்தது.
துறை சார்ந்த முக்கிய பைல்களை இவர் டெல்லியில் இருந்து சென்னைக்கு எடுத்து வந்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. எனவே மன்மோகன் கேட்டுக்கொண்டபடி 2013 டிசம்பரில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த இவர், 2014 ஜனவரியில் கட்சியில் இருந்தும் விலகினார்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இது குறித்து பேசிய நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் துறையில் ‘ஜெயந்தி வரி’ வசூலிக்கப்பட்டதாக விமர்சித்தார். பாஜக ஆட்சி அமைந்ததுமே இவருக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் செப்டம்பர் 9-ம் தேதி (இன்று) அதிகாலை 5 மணி முதல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்த ஆரம்பித்தனர். ஆனால் 12 மணி நேரங்களுக்கு பிறகு, மாலை 5.30 மணியளவில்தான் இந்த ரெய்டு பற்றி வெளியுலகுக்கு தெரிய வந்தது.
அலுமினியம், பாக்சைட் சுரங்கங்கள், கனிம வளங்கள், தாமிர உருக்கு ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடு ஆலைகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாகவும் ஜெயந்தி நடராஜன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் க்ளீயரன்ஸ் அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், அந்த தனியார் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் உமங் கெஜ்ரிவால் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்க்பூர் மாவட்டத்தில் உள்ள சரண்டா வனத்தில் வன நிலப்பரப்பு ஆக்கிரமித்தலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக ஜெயந்தி நடராஜன் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.