Advertisment

”நான் எந்த தவறும் செய்யவில்லை, இது அரசியல் சதி”: சி.பி.ஐ. சோதனை குறித்து லாலு

“ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது சட்டத்திற்கு புறம்பாக செய்யவில்லை. இந்த சோதனை ஒரு அரசியல் சதி, சூனிய வேட்டை. என் மீது எந்த தவறும் இல்லை”

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
”நான் எந்த தவறும் செய்யவில்லை, இது அரசியல் சதி”: சி.பி.ஐ. சோதனை குறித்து லாலு

ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வேக்காக உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத்திற்கு சொந்தமான 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடியாக சோதனை மேற்கொண்டது. இந்த முறைகேடு புகாரை லாலு பிரசாத் யாதவ் மறுத்தார்.

Advertisment

கடந்த 2004-2009 காங்கிரஸ் ஆட்சியில், ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு ரயில்வேக்காக உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வெள்ளிக் கிழமை வழக்குப்பதிவு செய்தது.

மேலும், இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பி.கே.கோயல், 2 தனியார் நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீதும் இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், வெள்ளிக்கிழமை காலை லாலு பிரசாத் யாதவிற்கு சொந்தமாக டெல்லி, பாட்னா, ராஞ்சி, ஒடிஷா, கோர்கான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடியாக சோதனை நடத்தியது.

இந்த சோதனையை உள்ளூர் பாஜக விமர்சித்து வருகிறது. ஆனால், அரசியல் பழிதீர்க்கும் விதமாக மத்திய பா.ஜ.க. அரசு வீண்பழியை சுமத்தியுள்ளது என ராஷ்டிரிய ஜனதா தள கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஆஜராக சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு லாலு பிரசாத் யாதவ் வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவ், “ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது சட்டத்திற்கு புறம்பாக செய்யவில்லை. இந்த சோதனை ஒரு அரசியல் சதி, சூனிய வேட்டை. என் மீது எந்த தவறும் இல்லை”, என தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “இந்த சோதனை அரசியல் பழிதீர்க்கும் நடவடிக்கை இல்லை. சட்டம் தன் கடமையை செய்கிறது. இதில், பாஜக அரசோ, கட்சியோ எதுவும் செய்யவில்லை”, என கூறினார்.

இந்த சோதனை குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

1991-1993-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒருங்கிணைந்த பீகாரின் முதலமைச்சராக இருந்தபோது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக லாலு பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், தற்போது ரயில்வேயில் உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அவருக்கு மீண்டும் நெருக்கடியை தந்துள்ளது.

Cbi Tejashwi Yadav Lalu Prasad Yadav Rabri Devi Bjp Venkaiah Naidu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment