2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும் என மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் அஜரான சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் தாக்கல் செய்துள்ள மனுவில், "இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் நேர்மை தொடர்பான வழக்கு.
மேலும் தேசிய அளவில் கவனம் பெறும் வழக்கு. ஆகவே இந்த வழக்கில் விரைந்து விசாரிக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் விசாரணை தேவை. அந்த தினத்தை நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.
முன்னதாக 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி உள்பட 14 பேரையும் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு டிசம்பரில் விடுவித்தது. அப்போது நீதிபதி, “வழக்கை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறிவிட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிபிஐ தரப்பில் வழக்கில் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த 2ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சிபிஐ தொடர்பான மேல்முறையீட்டு வாதங்கள் செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் முன்வைக்கப்படுகின்றன எனக் கூறப்படுகிறது.
வழக்கில் தாமதம் ஏன்?
ஜனவரி 15, 2020 அன்று மேல்முறையீட்டின் மீதான தனது வாதங்களை முடித்ததாக சிபிஐ கூறியது, ஆனால் "கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களால் அவர்களது வாதங்களை முடிக்க முடியவில்லை.
அதன்பிறகு, தற்போதுள்ள வழக்குகள் பல தேதிகளில் இந்த நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு காரணத்திற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ, அவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
கோரிக்கை நிராகரிப்பு
இதற்கிடையில் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய எதிர்தரப்பு வழக்கறிஞர், சிபிஐ "முன்கூட்டிய விசாரணையைக் கோரும் இதேபோன்ற விண்ணப்பத்தை உயர் நீதிமன்றமே நிராகரித்தது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“