லுக் அவுட் நோட்டீஸ் அமலில் இருப்பதால் கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெறுவதற்காக, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல, ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரத்தின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ள நிறுவம் ஒன்றுக்கு பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில், கடந்த மே மாதம் 15-ம் தேதி கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ கடந்த ஜூன் மாதம் கார்த்திக் சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், கார்த்திக் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனால், அவரை கண்காணிக்கப்படும் நபராக(லுக் அவுட் நோட்டீஸ்) நபராக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய கார்த்திக் சிதம்பரம், மத்திய அரசின் லுக் அவுட் நோட்டீஸ்க்கு இடைக்கால தடை பெற்றார்.
உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்தி, சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மல்முறையீடு செய்தது. இது தாடர்பான விசாரணை கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. அப்போது, உயர் நீதிமன்றத்தின் லுக் அவுட் நோட்டீஸ்க்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம், கார்த்திக் சிதம்பரத்தை சிபிஐ-யிடம் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி, டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில், கார்த்திக் சிதம்பரம் இரண்டு முறை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், தான் வெளிநாடு செல்ல அனுமதி வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கார்த்திக் சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், லுக் அவுட் நோட்டிஸ் அமலில் இருப்பதால் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என்று தெளிவுபடுத்தியது. இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.