கடந்த ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. இன்று, அதற்கான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வில், கருணை மதிப்பெண் வழங்குவதற்கான விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிளஸ்-2 பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்கும் வழக்கமான முறையை ரத்துசெய்வதாக சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்தது.
இந்நிலையில், கருணை மதிப்பெண் முறையை ரத்துசெய்வதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு, சிபிஎஸ்இ-யின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தத் திடீர் அறிவிப்பால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் எனத் தெரிவித்தது. இதனால், இந்த ஆண்டில் புதிய ரத்து முடிவுகள் எதையும் அமல்படுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் சிபிஎஸ்இ இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ கருணை மதிப்பெண்குறித்து இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறது. சிபிஎஸ்இ இயக்குநர் உயர்நீதிமன்ற உத்தரவுகுறித்து, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கலந்து ஆலோசிக்கவுள்ளார். இந்த காரணத்தினால், சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.