நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியானது.
சிபிஎஸ்இ என்று அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பிளஸ்-2 தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன்-டையு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை உள்ளடங்கிய சென்னை மண்டலத்தில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வில் கலந்துகொண்டனர். இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் படித்த 10,98,891 பேர் எழுதினர். மாணவர்கள் 6,38,865 பேரும், மாணவிகள் 4,60,026 பேரும் தேர்வெழுதியிருந்தனர்.
தேர்வு முடிவுகளை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி Results.nic.in, Cbseresults.nic.in, Cbse.nic.in உள்ளிட்ட இணையதளங்களுக்கு சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வில் கடினமான கேள்வித்தாள், தவறான கேள்விகள் கேட்கப்படும்பட்சத்தில் சலுகை முறையில் மதிப்பெண் வழங்கும் முறை பல ஆண்டுளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சலுகை முறையில் மதிப்பெண் வழங்கும் முறை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கம் போல இந்த ஆண்டும் சலுகை மதிப்பெண் தொடர வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அடுத்த ஆண்டு முதல்(2018) சலுகை மதிப்பெண் முறையை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது.