அண்மையில் கேரள மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், திருக்கோயில் அர்ச்சகர்களாக முறைப்படி பயிற்சி பெற்றவர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தேர்வு செய்தது.
இதில் 32 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 26 பேர் பிராமணர்கள், மீதமுள்ள பிராமணர் அல்லாதோர் 36 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இதில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
பழங்குடி இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என மொத்தமாக 36 பேர் அர்ச்சகராகும் வாய்ப்பைப் பெற்றனர். திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத்திற்குட்பட்ட அனைத்துக் கோவில்களிலும் இனி இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும், பொதுப்பட்டியலின் வழியாகவும் தகுதி வாய்ந்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவின் திருவல்லாவில் உள்ள மனப்புரம் சிவன் கோயிலின் அர்ச்சகராக தலித் ஒருவர் முதன்முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். கேரளாவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. அதேபோல், இடதுசாரிகளின் மிகப்பெரிய வெற்றியாகவும் இது கருதப்படுகிறது.
இந்த தலித் அர்ச்சகரின் பெயர் கிருஷ்ணன்(22). பிகே ரவி மற்றும் லீலா ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். தந்த்ரா சாஸ்த்ராவில் பத்து ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு முறையாக அர்ச்சகர் ஆகியிருக்கிறார்.
தனது குரு கேகே அனிருதன் தந்த்ரியின் ஆசிர்வாதத்துடன், இளம் அர்ச்சகரான கிருஷ்ணன், சிவன் கோயிலில் மந்திரத்தை உச்சரித்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
திரிசூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், சம்ஸ்கிருத மொழி பட்டப்படிப்பு இறுதியாண்டில் உள்ளார். தனது 15 வயதிலேயே சிறப்பாக பூஜை செய்யத் தொடங்கிய கிருஷ்ணன், தன் வீட்டின் அருகில் இருந்த கோவில்களில் பூஜைகள் நடத்தியிருக்கிறார்.
தமிழகத்திலும் இது போன்று அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.