ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நவ.,13 வரை நீதிமன்றக் காவல் விதித்து டில்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்துக்கு, சுப்ரீம் கோர்ட், சிபிஐ கைதில் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. ஆனாலும், அமலாக்கத்துறையின் விசாரணையில் இருந்ததால், வெளியே வர முடியாத நிலையில் இருந்தார். இந்நிலையில், இன்றுடன் (அக்.,30) விசாரணை காலம் முடிவடைந்ததை அடுத்து டில்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, சிதம்பரத்திற்கு கூடுதலாக ஒருநாள் காவல் நீடிக்கும் படி அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்புத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குஹெர், சிதம்பரத்துக்கு 14 நாட்கள் (நவ.,13 வரை) நீதிமன்ற காவல் விதித்தார். மேலும், அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, திஹார் சிறை அதிகாரிகள் அவருக்கு மருந்துகள், மேற்கத்திய கழிவறை, தனி சிறை, பாதுகாவலர்கள் ஆகியவற்றை வழங்கவும், வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட உணவை வழங்கவும் உத்தரவிட்டார்.