டோக்லாம் பகுதியில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், சீனாவிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட ஷூ பெட்டியின் மேல் தேசிய கொடி பொறித்து அதனை அவமதித்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லையில் டோக்லாம் பகுதி அமைந்திருக்கிறது. இந்த டோக்லாமின் பெரும்பகுதி பூடானின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், இந்தியாவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தப்படி, இந்திய ராணுவம் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், டோக்லாம் பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவத்தினர் அங்கு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து, அங்கு ஏராளமான இந்திய ராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சீனாவிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட ஷூ பெட்டியில் இந்திய தேசிய கொடி பொறிக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து
அங்குள்ள ஷூ கடைக்காரர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பெட்டியின் மேலே சீன மொழியான மந்தாரின் மொழியில் சில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததாக கூறும் காவல் துறையினர், இந்தியர்களை அவமதிப்பதற்காக சீனா இவ்வாறு செய்திருக்கலாம் என் சந்தேகிக்கின்றனர்