பதற்றம் நிலவி வரும் டோக்லாம் பகுதியில் இருந்து இந்தியா தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது என்ற சீனாவின் அறிக்கைக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையில், இந்தியா - சீனா - பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் இணைகின்றன. இந்த பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டது.
சர்ச்சை நிலவி வரும் இந்த இடத்திற்கு பூடான் உரிமை கொண்டாடுகிறது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. மேலும்,"சிக்கன்ஸ் நெக்" அல்லது "சிலிகுரி காரிடார்" எனப்படும் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை ஏனைய இந்தியாவுடன் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிலபரப்பை சீனா எளிதாக சென்றடைய இது வழி செய்யும் என்பதால் இந்தியா கவலை கொண்டுள்ளது.
இதனையடுத்து, சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. அங்கு ராணுவ வீரர்களை குவித்தது. பதிலுக்கு சீனாவும் தங்களது ராணுவத்தை அங்கு குவித்துள்ளது. இதனால், எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, அண்மையில் சீனா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனையடுத்து, வரைபடங்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் அடங்கிய சுமார் 15 பக்க அறிக்கை ஒன்றை கடந்த புதன்கிழமையன்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், இந்தியா தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது. வீரர்கள் 400 பேர் குவிக்கப்பட்டிருந்த சர்சைக்குள்ளான இடத்தில் தற்போது 40 பேரே உள்ளனர். இது கடந்த 45 நாட்களாக நீடித்து வந்த தீவிரத்தை குறைத்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுமார் 300 - 350 துருப்புகள் மற்றும் இரண்டு புல்டோசர்கள் டோக்லாம் பகுதியில் உள்ளன. படைகளை திரும்பப் பெறவும் இல்லை, குறைக்கவும் இல்லை.ஏற்கனவே இருந்த படைகள் அதே எண்ணிக்கையில் உள்ளன. இரு தரப்பும் சுமார் 120-150 மீட்டர் தூரத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளன. அதேசமயம், இரு நாட்டு படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எந்த விரோதப் போக்கும் இல்லை என இந்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.