சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு சினிமா உலகின் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி, கடந்த 2008ம் ஆண்டு அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதற்கு ‘பிரஜா ராஜ்யம்’ என பெயரிட்டார். ஆந்திர மாநிலத்தின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை சிரஞ்சீவி ஏற்படுத்துவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. 2009ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் சிரஞ்சீவி வெற்றி பெற்றார். ஆனால், அதன் பிறகு அவரால் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்த முடியவில்லை.
இதைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டு காங்கிரஸில் தனது கட்சியை இணைத்துக் கொண்டு ஐக்கியமாகிவிட்டார். இப்போது மீண்டும் நடிகராகி, அரசியலில் இருக்கிறோமா இல்லையா என்று அவருக்கே தெரியாத நிலையில் இருக்கிறார்.
இதன்பின், சுமார் 10 ஆண்டுகள் கழித்து, தென் மாநிலத்தில் இருந்து மிகப்பெரிய சினிமா ஆளுமையான கமல்ஹாசன், மதுரையில் இன்று மாலை மிகப்பெரிய பொதுக் கூட்டத்தை கூட்டி, மக்கள் முன்னிலையில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்க உள்ளார். அவரின் கட்சியின் பெயர் என்ன, கொள்கைகள் என்ன, அவரது நிறம் என்ன என்று அறிய மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்த பொதுக் கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வரப் போகிறார்கள் என்பதும் எதிர்பார்ப்பின் ஒரு அங்கமாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஆகஸ்ட் 26, 2008ல் சிரஞ்சீவி திருப்பதியில் மிகப்பெரிய பொதுக் கூட்டம் நடத்தி தனது கட்சியின் பெயரை அறிவித்தார். சுமார் 20 லட்சம் பேர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரசிகர்களின் பேராதரவு முன்னிலையில், ராக்கெட் ஏவும் போது பின்பற்றப்படும் கவுண்ட்டிங் போல, சிரஞ்சீவி கவுண்ட்டிங் சொல்லி தனது கட்சியின் பெயரை அறிவித்த தருணத்தை இங்கே பார்ப்போம்.
https://www.youtube.com/embed/8neklF8hmvs