மேற்கு வங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த சாரதா நிதி நிறுவனம், தமது முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அந்த வழக்கில், நிறுவனத் தலைவர் சுதிப்தா சென் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கே.டி.சிங் தொடர்புடைய நிறுவனத்தின் 239 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது. இந்நிலையில், முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், கடந்த 3 நாட்களாக அவரைக் காணவில்லை என்று கூறப்பட்டன. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மமதாவிடம் கேள்வி எழுப்பிய போது, ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொல்லி ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார்.
கடைசியாக, புத்தக விழா ஒன்றில் அவரை நேரில் பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, அவரை கடந்த மூன்று நாட்களாக யாருமே பார்க்கவில்லை. 1983ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார், முதல்வர் மமதா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இன்று (பிப்ரவரி 3) மாலையில் இதில் பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்தன. கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று வந்தது. பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் வராத காரணத்திற்காக ராஜீவ் குமாரை கைது செய்ய அவர்கள் வந்திருப்பதாக கூறப்பட்டது.
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரத்தில் மம்தா பானர்ஜி மீது புகார்களை கூறியதும், அதற்கு மம்தா பதில் கூறியதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த சில மணி நேரங்களில் இந்த நடவடிக்கைகள் நீண்டதால் பாஜக மேலிடத்தில் உள்ள முக்கிய தலைவர் தூண்டுதலில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனது ட்விட்டர் பதிவில் இதை வர்ணித்தார் மம்தா.
இதற்கிடையே போலீஸ் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை அவரது இல்லத்தினுள் மாநில போலீஸ் அதிகாரிகள் விடவில்லை. அந்த சிபிஐ அதிகாரிகளை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் கொல்கத்தாவின் மத்திய-மாநில காவல் அமைப்புகள் இடையே மோதலும், குழப்பமும் கலந்த சூழல் உருவாகியிருக்கிறது.