/tamil-ie/media/media_files/uploads/2022/10/shinde-uddhav-1.jpg)
உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் தாங்கள் தான் "உண்மையான சிவசேனா" தங்களுக்கு தான் சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் பெயர் ஒதுக்க வேண்டும் என மாறி மாறி கூறிவந்தநிலையில் கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை நேற்று இரவு முடக்கி தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நவம்பர் 3ஆம் தேதி அந்தேரி (கிழக்கு) சட்டமன்ற இடைத்தேர்தலில் தாக்கரே, ஷிண்டே பிரிவினர் சின்னத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தநிலையில், கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தாக்கரே அரசுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து விலகினர். இதையடுத்து உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. பாஜக உடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைத்தார். ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றார்.
இதையடுத்து யார் ரியல் சிவனோ என மோதல் எழுந்தது. தாக்ரே, ஷிண்டே தரப்பினர் இருவரும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா, தங்களுக்கு தான் சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் பெயர் ஒதுக்க வேண்டும் எனக் கூறி அணி திரட்டி வந்தனர்.
அந்தேரி (கிழக்கு) சட்டமன்ற இடைத்தேர்தல் வருவதைச் சுட்டிக்காட்டி இரு பிரிவினரும் தங்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டும் எனக் கூறி தேர்தல் ஆணையத்தை நாடினர். ஷிண்டே தரப்பு, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் தங்கள் தரப்புக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டதை மேற்கோள் காட்டி, கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினர். உத்தவ் தாக்கரே தரப்பும், சின்னம் கோரி தெரிவித்தனர்.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே, சின்னம் பெறும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் முடிவு எடுப்பதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி தாக்கரே
மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஆணையம் தற்போது சின்னம், பெயரை முடக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தாக்கரே மகன், எம்எல்ஏவுமான ஆதித்யா தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில்," சிவசேனா பெயர் மற்றும் சின்னத்தை முடக்கும் செயலை துரோகிகள் செய்துள்ளனர். இதை மகாராஷ்டிரா மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் போராடி வெல்வோம். நாங்கள் உண்மையின் பக்கம். சத்யமேவ ஜெயதே" எனக் கூறி பதிவிட்டுள்ளார்.
இரு தரப்பும் முன்வைத்த வாதங்கள், ஆவண ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை உள்ளது, இதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால், இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு ஆணையம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்குள் இருதரப்பினரும் இடைத்தேர்தலுக்கான புதிய 3 சின்னங்களை தேர்வு செய்து சமர்பிக்கும்படி கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு சின்னத்தை ஒதுக்கும். தேர்தல் ஆணையத்தின் முடிவை தாக்கரே பிரிவு விமர்சித்து வருகின்றனர்.
“இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான தாக்குதல். 4 மணி நேரத்திற்குள், தேர்தல் ஆணையம் தனது உத்தரவை பிறப்பித்துள்ளது. யாரோ கொடுத்த புகாரின் மீது எவ்வித விளக்கமும் கேட்காமல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது” என்று சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
ஷிண்டே பிரிவைச் சேர்ந்த அமைச்சர் தீபக் கேசர்கர் கூறுகையில், “இந்த முடிவை தேர்தல் ஆணையம் விதிகளை பின்பற்றி எடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் நாங்கள் வெல்வோம். நாங்கள் தான் உண்மையான சிவசேனா, சின்னத்தை பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு மே மாதம் சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே உயிரிழந்ததையடுத்து அந்தேரி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 3ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. உத்தவ் பிரிவு லட்கேவின் மனைவி ருதுஜாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் பாஜக வேட்பாளர் முர்ஜி படேல், முன்னாள் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கார்ப்பரேட்ரரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.