உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நாளை ஓய்வு பெறுகிறார்: பிரிவு உபசார விழாவில் பாராட்டு மழை

முத்தலாக் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஆதார் வழக்கில், தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்று வழங்கப்பட்ட தீர்ப்பு உள்ளிட்டவைகள் தனிச்சிறப்படையது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அதில், பங்கேற்ற மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உள்பட அனைவரும் நீதிபதி ஜே.எஸ்.கெஹருக்கு புகழாரம் சூடினர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த டி.எஸ்.தாக்கூர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். கடந்த 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த நீதிபதி கெஹர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 1977-ஆம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்தார். இவர் பஞ்சாப், சண்டீகர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் செல்லாது, அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது, சகாரா தலைவர் சுப்ரதா ராயை சிறைக்கு அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்ப்புகளை நீதிபதி கெஹர் இடம் பெற்ற அமர்வு வழங்கியுள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கிலும் இவர் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தவர்.

கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த ஜே.எஸ்.கெஹர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற முதல் சீக்கியர் என்ற பெருமையை பெற்றவர். இவரது நியமனத்துக்கு சில வழக்கறிஞர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அவரது நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட 3 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு, தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வருகிற 27-ம் தேதியுடன் (நாளை) முடிவடைகிறது.

இதனை முன்னிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹருக்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அதில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், முத்தலாக் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஆதார் வழக்கில், தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்று வழங்கப்பட்ட தீர்ப்பு உள்ளிட்டவைகள் தனிச்சிறப்படையது. அதற்கான பெருமை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹரை சாரும். பத்திரிகைகள், தொலைகாட்சி என நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்று வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் மிகச் சிறந்த பணிகளில் இதுவும் ஒன்று என புகழாரம் சூடினார்.

மேலும், தலைமை நீதிபதியை நாம் முழுவதும் இழக்க போவதில்லை. வேறு ஒரு ரூபத்தில் அவர் நம்மோடு தான் இருக்க போகிறார் என தான் நம்புவதாகவும் கே.கே.வேணுகோபால் குறிப்பிட்டார். இவ்வாறு அவர் குறிப்பிட்டு பேசியது, பதவி ஓய்வு பெற்றதும் வேறு ஏதேனும் ஒரு பதவியில் நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அமர்த்தப்படுவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தலைமை நீதிபதி பேசும் போது, நான் இந்த நாட்டுக்கு கடமைப்பட்டுள்ளேன் என்றார். “நாட்டின் தலைமை நீதிமன்றத்தில், தலைமை பொறுப்பில் பணியாற்ற எனக்கு வாய்ப்புக்கு கொடுத்த நாட்டுக்கு இந்த தருணத்தில் நன்றி கூறிக் கொள்ள விரும்பிகிறேன்” என நீதிபதி ஜே.எஸ்.கெஹர் பேசினார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் ஓய்வு பெறுவதையடுத்து, தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதியாக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close