கர்நாடகா மாநிலத்தில், நிகழ்ச்சி ஒன்றிற்காக பள்ளிக்கு வந்திருந்த சமூக நலத்துறை அமைச்சரை நிறுத்தி, 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிலைமையை எடுத்துக்கூறி, அவற்றின் தரத்தை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்த சம்பவம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா எனும் பள்ளியில் செயல்பட்டுவரும் வித்யா விகாஸ் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு, கடந்த வெள்ளிக்கிழமை அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். அந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பொதுமக்கள் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
இதையடுத்து, நிக்ழ்ச்சி முடிந்தபின், மேடையில் இருந்து அமைச்சர் ஆஞ்சநேயா இறங்கி வந்தார். அப்போது, அப்பள்ளியில் 10-வது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நாயனா ஜோகி என்ற மாணவி, அமைச்சரை பாதிவழியிலேயே நிறுத்தி, அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிலைமை குறித்து எடுத்துக்கூறி, அவற்றின் தரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், தனது இந்த கோரிக்கைகளுக்கு முதன்மைத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த மாணவி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தங்கள் பிள்ளைகளை கட்டாயமாக அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும், இதனை கட்டாயமாக்க அரசு மசோதா இயற்ற வேண்டும் என வலியுறுத்தினாள்.
இதை கவனமாக கேட்ட அமைச்சர் ஆஞ்சநேயா, இதுகுறித்து முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக மாணவியிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து, மாணவி நாயனா ஜோகி டைம்ஸ் ஆஃப் இந்தியா-க்கு அளித்த பேட்டியில், “அரசு பள்ளிகள், கல்லூரிகளில் கழிவறைகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளுமே இல்லாதது கண்டு நான் வருத்தமுற்றேன். நிகழ்ச்சியில் அமைச்சர் அரசு பள்ளிகள் குறித்து பேசியதை நான் கேட்டேன். பலரும் இவ்வாறு பேசியிருக்கின்றனர். ஆனால், அரசு பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்கான மாற்றம் முதலில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளிடம் இருந்துதான் துவங்க வேண்டும்”, என கூறினார்.