scorecardresearch

அரசு பள்ளி மாணவரின் கூகுளில் பணிபுரியும் கனவு பலித்தது

சண்டிகரை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் கடின முயற்சியால் அவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

அரசு பள்ளி மாணவரின் கூகுளில் பணிபுரியும் கனவு பலித்தது

சண்டிகரை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் கடின முயற்சியால் அவருக்கு கூகுள் நிறுவனத்தில், கிராஃபிக் டிசைனிங் பிரிவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

சண்டிகரை சேர்ந்த ஹர்ஷித் சர்மா என்பவர் அரசு பள்ளியில் தொழில்நுட்ப பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு பத்து வயதிருக்கும்போதே தான் ஒரு கிராஃபிக் டிசைனராக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமிருந்தது. அதன் பிறகு, கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற லட்சியம் ஹர்ஷித் சர்மாவின் மனதில் துளிர்த்தது. அதற்காக, தன்னுடைய மாமா ரோஹித் சர்மாவிடம் கிராஃபிக் டிசைனிங் பயிற்சியை ரகசியமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

”நான் 11-ஆம் வகுப்புக்குள் நுழைந்தபோது தொழில்நுட்ப பிரிவை தேர்ந்தெடுத்தேன். என் பெற்றோரிடம் நான் கிராஃபிக் டிசைனராக ஆக வேண்டும் என்ற எனது ஆசையை கூறினேன்.”, என சொல்லும் ஹர்ஷித் சர்மா டிஜிட்டல் இந்தியாவில் திறம்பட செயலாற்றியதற்காக பிரதமர் அலுவலகத்திலிருந்து 7,000 ரூபாய் பரிசுத் தொகையையும் பெற்றார். ”என்னுடைய பள்ளிக்காலங்களில் பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு போஸ்டர்கள் உருவாக்குவேன். அதில், 40,000-50,000 ரூபாய் வரை சம்பாதிப்பேன்”, என கூறுகிறார் ஹர்ஷித் சர்மா.

கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கூகுள் லிங்க் மூலம் தனது போஸ்டர்களை கூகுள் நிறுவனத்திற்கு ஹர்ஷித் அனுப்பி வைத்தார். அவரது போஸ்டர்கள் கூகுள் நிறுவனத்திற்கு பிடித்துப்போகவே, கடந்த ஜூன் மாதம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியுமாறு அந்நிறுவனம் ஹர்ஷித்திற்கு கடிதம் அனுப்பியது. வரும் ஆகஸ்டு 7-ஆம் தேதி கலிஃபோர்னியாவிற்கு பறக்கவிருக்கிறார் ஹர்ஷித். ஒரு வருடம் அவருக்கு பயிற்சிக் காலம். அவருக்கு உதவித்தொகையாக மாதம் 4 லட்சம் வழங்கப்படும். அதன்பிறகு அவருக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் வாயைப் பிளப்பீர்கள். மாதம் 12 லட்சம்.

இந்த வெற்றி குறித்து கூறிய ஹர்ஷித்தின் வார்த்தைகள் இவை: “என்னைப் போன்ற சராசரி மாணவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என யார் எதிர்பார்த்தது? என்னுடைய மகிழ்ச்சியையும், உணர்வையும் எப்படி பகிர்ந்துகொள்வது என்றே தெரியவில்லை. என்னுடைய கனவு நனவானது. என்னுடைய கடின உழைப்பிற்கான வெற்றி இது.”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Class xii chandigarh boy from govt school bags his dream job at google

Best of Express