நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு... எச் சி குப்தாவுக்கு 2 ஆண்டு சிறை

கே எஸ் எஸ் பி எல் நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் குப்தாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீப்பளித்துள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தியதில், மத்திய பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச் சி குப்தா, கூடுதல் செயலாளராக இருந்த குரோபா மற்றும் சுரங்க ஒதுக்கீடு இயக்குநர் சமாரியா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இது வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த வாரம் இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், எச் சி குப்தா, உள்ளிட்ட 3 அதிகாரிகளும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் எச் சி குப்தா, கூடுதல் செயலாளராக இருந்த குரோபா மற்றும் சுரங்க ஒதுக்கீடு இயக்குநர் சமாரியா ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் 3 பேருக்கும் ரூ.1,00,000 அபராதம் விதித்தும் நீதிபதி பரத் பராஷர் தீர்ப்பளித்தார்.

அதோடு மட்டுமல்லாமல், கே எஸ் எஸ் பி எல் நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் குமார் அலுவாலியாவுக்கு மூன்றாண்டு சிறையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பரத் பராஷர் தீர்ப்பளித்தார்.

×Close
×Close