மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பரக்னாஸ் மாவட்டத்தில், உள்ள பாதுரியா பகுதியில் மத கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின் காரணமாக அப்பகுதியில் ஏராளமான கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இரண்டு மதத்தை சேர்ந்தவர்களுக்கு மாறி மாறி தாக்கிக் கொண்டதால், ஏராளமானோர் காயமடைந்தனர். மேலும், போலீஸ் வாகனங்கள் மற்றும் காவல் நிலையத்திற்கும் மர்ம கும்பல் தீ வைத்துள்ள சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அங்கு துணை ராணுவப் படையினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. சுமார் 300 துணை ராணுவ படை வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமூகவலைதளமாக பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவால், பாதுரியா பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு தரப்பு மதத் தலைவர்களுக்கும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநராக உள்ள கேசரிநாத் திரிபாதி, தன்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டியதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: ஆளுநராக உள்ள கேசரிநாத் திரிபாதி ஒரு பாஜக வட்டச் செயலாளர் போல செயல்படுகிறார். அவரது பேச்சு என்னை அவமதிக்கும் வகையில் இருந்தது. எனவே இது போல இனி என்னிடம் பேச வேண்டாம் என கூறிவிட்டேன்.
ஆளுநர் என்பவர் நியமனம் செய்யப்பட்டவர் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். நான் மக்களால் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்.
அங்குள்ள பாஜக-தரப்பில் கூறப்படுவதாவது: வடக்கு 24 பரக்னாஸ் பகுதியில் உள்ள ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் காவல்துறையின் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.