ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு முடிவடைகிறது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தனது வேட்பாளரை நிறுத்துகிறது. பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்கள், அனைத்து மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
இவர்களில் 48.5 சதவீதம் பேரின் ஆதரவு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருப்பதாக தெரிகிறது. ஆனால், வெற்றி பெறுவதற்கு 51 சதவீத வாக்குகள் வேண்டும் என்றபோதிலும், அதை பெற்றுவிட முடியும் என்று அக்கூட்டணி கருதுகிறது. அதே சமயம், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என தெரிகிறது.
எனவே, எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் சவாலை உருவாக்கலாம் என்ற கருத்து எதிர்க்கட்சிகளிடையே உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இரண்டாவது தடவையாக தேர்ந்தெடுக்கலாம் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் யோசனை தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a357-300x217.jpg)
இருப்பினும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்த மகாத்மா காந்தி பேரனும், மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி, பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் பெயர்களே பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தின் போது அவர் மதிய விருந்தும் அளிக்கிறார். கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சோனியா காந்தியுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
நரேந்திர மோடி அரசு பதவி ஏற்று, 3 ஆண்டுகள் நிறைவடையும் நாளில், இந்த ஆலோசனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பு செயலாளர் வேணு ராஜமணிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, 'இன்னும் இரண்டு மாதங்களில் எனது பணி நிறைவு பெற இருக்கிறது. விரைவில் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்க உள்ளார். இன்னொரு முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை. என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அதிகாரிகளை அந்தந்த துறைகளுக்குத் திருப்பி அனுப்புகிறேன்' என்று தெரிவித்தார்.