பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்திவரும் நிறுவனத்தின் வர்த்தகம், ஒரே வருடத்தில் 16,000 மடங்கு உயர்ந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா டெம்பிள் எண்டர்பிரைசஸ் எனும் நிறுவனத்தை நடத்திவருகிறார். அதன் இயக்குநர்களில் ஒருவராக ஜெய்ஷா அங்கம் வகிக்கிறார்.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் வர்த்தகம் 2014-2015-ஆம் ஆண்டில் 50,000 ரூபாயாக இருந்தநிலையில், ஒரே வருடத்தில், அதாவது 2015-2016-ஆம் ஆண்டில் 16,000 மடங்கு (80.5 கோடி) அதிகரித்ததாக, ‘தி ஒயர்’ இணையத்தளம் கட்டுரை வெளியிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், “அசையா சொத்துகள், முதலீட்டாளர்கள், கையிலுள்ள சரக்குகள் என எதுவுமே இல்லாத ஒரு நிறுவனம், ரூ.80.5 கோடி ஆண்டு வர்த்தகம் நடத்தியதாக கூறப்படுவது ஆச்சர்யமாக உள்ளது.” என தெரிவித்தார்.
“அசையா சொத்துகள், முதலீட்டாளர்கள், கையிலுள்ள சரக்குகள் என எதுவுமே இல்லாத ஒரு நிறுவனம், ரூ.80.5 கோடி வர்த்தகத்தை எப்படி எட்ட முடியும்? இது ஆச்சரியமாக இல்லையா? அதுவும் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபோது இது நடந்திருக்கிறது.", என கூறினார்.
மேலும், அமித்ஷா மகன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த பிரதமர் உத்தரவிடுவாரா? சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்களா எனவும் கபில் சிபல் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து விரைவில் விசாரணைக்கு அவர் உத்தரவிட வேண்டும் என கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பயன்பெற்றவர்கள் அமித்ஷா மற்றும் அவரது மகன் மட்டுமே என குற்றம்சாட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பயன்பெற்றவர்கள் ரிஸர்வ் வங்கி, ஏழை மக்கள், விவசாயிகள் யாரும் இல்லை எனவும் அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அமித்ஷாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.