கடந்த ஜுலை ஒன்றாம் தேதி ஜி.எஸ்.டி. மசோதா நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஜி.எஸ்.டி.க்கு எதிராக போராட்டமும் நடந்த வண்ணம் உள்ளது. இன்னமும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருப்பது ஜி.எஸ்.டி. தான். ஒருபுறம், ஜி.எஸ்.டி. குறித்து முழு விவரம் தெரியாத பெரும் வணிகர்கள், சிறு, குறு வணிகர்கள் என அனைவரும் கண்ணில்பட்டவர்களிடம் எல்லாம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் ஓரளவிற்கு விவரம் தெரிந்த நெட்டிசன்கள் சமூக தளங்களில் ஜி.எஸ்.டி. குறித்த மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பிரதமர் மோடி குறித்த மீம்கள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, ஜி.எஸ்.டி.யை அறிமுகம் செய்கையில் அதனை கடுமையாக எதிர்த்தார். அப்போது, "என் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்" என கூறியதாக நேற்றுமுதலே செய்திகள் சமூக தளங்களில் பரவி வருகிறது. அதுகுறித்த மீமை குஷ்புவும் இன்று பதிவிட்டு, "டியர் மோடி... நீங்கள் சொன்ன இந்த வாக்கியம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன். 56 இன்ச் சேனைக்கு இப்போது என்ன ஆச்சு?" என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு "அச்சமற்ற வலிமையான தலைமைப் பண்புக்கு 56 இன்ச் மார்பு தேவை என்றும், தாம் அவ்வாறு கொண்டிருப்பதாகவும் பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில், 'அவருக்கு 56 இன்ச் தொந்திதான் உள்ளது' என அப்போது உத்தரபிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.